Sunday, September 20, 2009

மூச்சுக்காற்றால் நிறையும் வெளிகள்
------------------------------------------
துவாரகன்
----------------

தினைப்புனம் வெளியீடு
---------------------------------v மூச்சுக்காற்றால் நிறையும் வெளிகள்
v கவிதைகள்
v ஆசிரியர் : துவாரகன்
v உரிமை : குணேஸ்வரன் ஜெயகெளரி
v முதற்பதிப்பு : ஆவணி 2008
v வெளியீடு : தினைப்புனம்
v அச்சுப் பதிப்பு : மதுரன் கிறாபிக்ஸ், அல்வாய்
v அட்டை அச்சாக்கம்: ஹரிகணன் பிறிண்டேர்ஸ், யாழ்ப்பாணம்
v அட்டை ஓவியம் &
அட்டை வடிவமைப்பு : தா. சனாதனன்
v ஓவியங்கள் : கோ. கைலாசநாதன், தா. சனாதனன், எஸ். நேசன்
v விற்பனை உரிமை : புத்தகக்கூடம் 172, இராமநாதன் வீதி,
திருநெல்வேலி, யாழ்ப்பாணம்vMoochchukkaatraal Niraiyum Velikal
vPoems
vAuthor : Thuvarakan
vCopy rights : Kuneswaran Jeyagowry
vLanguage : Tamil
vFirst Edition : August 2008
vPublishers : Thinaippunam
vPrinting : Mathuran Grapics & Offset Printers, Alvai
vWrapper Printing : Harikanan Printers, Jaffna
vCover Painting &
Cover Disign by : T.Shanaathanan
(‘Home for my Butterflies’)
-II- 2004 - 75 X 56cm, mixed media on paper
vEllustrations : K.Kailasanathan, T.Shanaathanan, S.Nesan
vSelling Rights : BOOK LAB 172, Ramanathan Road, Thirunelveli, Jaffna.

vPrice Rs. : 150/-

-----------------------------------

மூச்சுக்காற்றால் நிறையும் வெளிகள்
துவாரகன் (1971)

இயற்பெயர் குணேஸ்வரன். தொண்டைமானாறு, கெருடாவிலில் பிறந்தார். தந்தை முருகேசு சுப்பிரமணியம். தாய் கமலாதேவி.

ஆரம்பக் கல்வியை யா/கெருடாவில் இந்து தமிழ்க் கலவன் பாடசாலையிலும் இடைநிலைக் கல்வியை யா/தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயத்திலும் க.பொ.த உயர்தரத்தை யா/உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரியிலும் பயின்றார்.

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் கலைமாணி (தமிழ் சிறப்பு) பட்டத்தைப் பெற்றார். ‘20ம் நூற்றாண்டில் ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்தவர்களின் கவிதை, புனைகதைகள்’ என்ற ஆய்வுக்காக பேராசிரியர் அ.சண்முகதாஸ் அவர்களின் நெறியாள்கையில் 2006இல் முதுதத்துவமாணிப்பட்டத்தைப் பெற்றார்.

மனைவி ஜெயகெளரி. குழந்தைகள் கலாகேசவன், ஆதிகேசவன்.

கலை இலக்கியத்துறையில் ஈடுபாடு கொண்டவர். தற்போது யா/அம்பன் அ.மி.த.க.பாடசாலையில் ஆசிரியராகக் கடமையாற்றி வருகின்றார்.

------------------------------------------------------------------------------------------


சமர்ப்பணம்

இந்தக் காலங்களால்
காவு கொள்ளப்பட்ட
என்னிரு மாமா
நடேசன் பஞ்சலிங்கம் (1956-1990)
நடேசன் பொன்னம்பலம் (1958-2004)
நினைவுகளுக்கு!
-------------------அணிந்துரை

தமிழ்க் கவிதைக்கு இரண்டாயிரம் ஆண்டுப் பழமை உண்டு. நீண்ட நெடிய வரலாற்றிலே கவிதை காலத்திற்குக் காலம் வடிவிலும் பொருளிலும் மாற்றம் பெற்று வந்துள்ளது. காலத்திற்கேற்ற வகையிலே கவிதை அமைப்பில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளமை உண்மையே எனினும் கவிதை என்பது எப்போதும் ஒன்றுதான்.

‘உள்ளத்துள்ளது கவிதை’ என்றவன் ஒரு மகாகவி. அவனே ‘நமக்குத் தொழில் கவிதை’ என்றும் சொல்லிப்போனான். கவிஞன் தனது சுமையைச் சுவையாக இறக்கி வைப்பதே கவிதையென்றும் சொல்லலாம். கவிஞன் இறக்கிய சுமையை வாசகன் நெஞ்சில் நினைவில் சுமப்பான். அந்தச் சுமையே ஒரு சுகானுபாவமாக இருக்கும். கவிதை படிப்பவன் உள்ளத்தில் ஒரு அதிர்வை ஏற்படுத்தவேண்டும். அந்த அதிர்வு சம்மட்டியால் அடிப்பதுபோலவும் இருக்கலாம். மயிலிறகால் வருடுவதுபோலவும் இருக்கலாம். நான் படித்த கவிதைகள் பல இத்தகைய அனுபவங்களை எனக்குத் தந்ததுண்டு. இதனால் இத்தகைய உணர்வுகளைத் தந்தவற்றை கவிதைகள் என்று எண்ணுகிறேன். இது என் தனிப்பட்ட அனுபவ வழிவந்த அபிப்பிராயம்.

கவிஞர் குணேஸ்வரன் (துவாரகன்) எமது மாணவர். அவர் மாணவனாக இருக்கும் காலத்திலேயே ‘தேடலில்’ ஆர்வம் கொண்டவர். தேடிப்படிப்பவர். படித்துத் தேடுபவர். அவர் பிறந்து வளர்ந்த கிராமியச் சூழலும் அவரைப் ‘படிப்பித்தது’ என்று கருதலாம். கிராமத்து இயற்கை வனப்பு மாத்திரமன்றிக் கிராமத்;து வாழ்வியலும் அவரது கவிதைகளுக்கு ஊற்றுக்கால்களாக அமைந்தன எனக் கருதலாம்.

நவகவிதை படைக்கும் குணேஸ்வரன் சிறுகதைத் துறையிலும் ஈடுபாடு கொண்டவர். படைப்பாளியின் உள்ளத்திலே ஒரு கரு பொறிதட்டினால் அவனுக்குக் கைகொடுக்கும் வடிவத்தினைப் பெற்று அது பிரசவமாகும். சில சுகப்பிரசவமாக வெளிவரும். சில ‘முக்கித்தக்கி’ அறுவைச் சிகிச்சையாலும் வெளிவருவதுண்டு.

குணேஸ்வரனின் கவிதைகள் சுகப்பிரசவமாகவே வெளிவந்துள்ளன.

சமூக இயல்பை, அதன் இருப்பை, ஏற்ற இறக்கங்களை அழகுறச் சுமந்து கவிதைகளாகப் பிரசவித்துள்ளார். அவரது கவிதைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விடயத்தைப் பேசுகின்றன. சில வெளிப்படையாகச் சில குறியீடாகப் பேசுவதை இக்கவிதைகளைப் படிப்போர் உணர்வர். குணேஸ்வரன் கவிதையென்ற வாகனத்திலேயே பவனிவருவது நல்லது என்று கருதுகிறேன்.

ஈழத்து நவகவிதை வரவுக்கு நல்வரவு கூறும் அவரது ஆக்கப்பணி சிறப்புற வாழ்த்துகிறேன்.


01.08.2008 பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா
தலைவர்,
தமிழ்த்துறை
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.---------------------


துவாரகனின் வெளிகள்

‘இந்தத் தேசத்தின் ஆத்மா
துடித்துக்கொண்டிருக்கிறது’ -துவாரகன்

இதுவாய்ப்போன இந்தத் தேசத்தை ‘மூச்சுக் காற்றால் நிறையும் வெளிகள்’என எழுதிச் செல்லும் கவிதைத் தொகுதி இது.

இந்த மூச்சுவெளிகளை உருவாக்கிய போர் மரணத்தை உமிழ்கிறது. அது எப்படிப்பட்டது?

‘நடந்து செல்லும் வயல் வரம்புகளில்
படுத்திருக்கும் பாம்புகள்போல்
வீதிகளின் வெளியெங்கும்
பதுங்கியிருக்கிறது மரணம்’
(ஒரு மரணம் சகுனம் பார்க்கிறது)

இந்த வெளியின் வாழ்வு எப்படிப்பட்டது?
‘முழுநிலவு வானில்
முகங்காட்டும் போதெல்லாம்
நிலவை ரசிப்பதற்கும்
நாதியற்றுப் போன வாழ்வு’
(கைவீசி நடந்து)

இந்த வாழ்வனுபவம் இந்தக் கவிஞனை ஒவ்வொரு துரும்பிலும் ஒட்டிவைத்துவிடுகிறது. சிலந்திவலை முகத்தில் மோதும் போதுகூட அது தொற்றிவிடுகிறது. அதனால் கவிஞன் சொற்களைத் தேடிப் போகவில்லை. அவை வந்து விழுகின்றன. இந்தச் சூழலுக்கு வெளியே வாழ்ந்துகொண்டு போர் பற்றிப்பிடித்த வாழ்வினை (அறிதலினால்) கவிதைகளாக்குவதிலுள்ள ஒரு இடைவெளியை வாழ்ந்தனுபவித்த இக் கவிதைகள் நமக்கு கிளப்பிக் காட்டுகின்றன.

1996 இலிருந்து 2008 வரையான காலப் பகுதியில் எழுதப்பட்ட கவிதைகள் இவை. 2002 இல் போர்நிறுத்தம் என்ற உடன்படிக்கையால் இந்தக் காலப் பகுதி கூறுபோடப்பட்டிருந்து, இப்போ மீண்டும் முருங்கை மரத்தில் ஏறியிருக்கிறது. தமிழ் மக்கள் மீதான போர்கள் பற்றியதல்ல இக் கவிதை. போர் உமிழ்ந்த வாழ்வு பற்றியது. அது போரின் போது மட்டுமல்ல போர் முடிச்சு அவிழ்கிறபோதும் அமைதிக்காலம் என்று வியாக்கியானப்படுத்துகிற காலத்தின் போதும் வாழ்வாதாரங்களை அது அழித்துத்தான் விட்டிருக்கிறது. அதன் ஏற்றத்தாழ்வுகளில் இக் கவிதைகளும் பயணம் செய்கின்றன.

நெருப்புக் கண்கள் கொண்ட காட்டெருமையைக் கண்டு பயந்து விலகி நின்ற காலம் போய் அதன் கண்கள் சாந்தமாய் இருப்பதையும் அது எருதுடன் பிணைக்கப்பட்டு வயல் உழுவதையும்... அதன் அருகில் நான்... என நிச்சயமற்ற தன்மையால் வரைகிறான் கவிஞன் இந்த போர் நிறுத்த காலத்தை.

இதன் உச்சங்களை தொட்டுக் காட்டும் முனைப்புகள் சில கவிதைகளின் வரிகளில் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன. உதாரணமாக,

‘ஆத்மார்த்த நினைவுதான்
என்றாலும்
சில நேரங்களில் மறக்கத்தான் வேண்டும்’
(நினைவுகள்)

என ஆத்மார்த்தத்தை நினைவுகளால் வெல்ல (முடியாது என்றபோதும்) முயல்வதை காண்கிறோம்.

இதேபோலவே வெள்ளெலிகளுடன் வாழ்தல் கவிதையில் சாப்பிடுவதற்கு எதையாவது தேடிக்கொள்ளவும் ஒளித்துக் கொள்வதற்கு ஏதாவது இடம் தேடிக்கொள்ளவும் முடியும் ஒரு வெள்ளெலியின் வாழ்வை மனிதவாழ்விலும் மேம்பாடாகக் காண்கிறான் இவன்.

‘நான் இனி
வெளியில் வாழ்வதைவிட
வெள்ளெலிகளுடன் வாழப் போகிறேன்’ (வெள்ளெலிகளுடன் வாழ்தல்)

‘தம் நீண்ட பிரிவின் பின்னான
உறவுகளையும்
வெடித்துச் சிதறடிக்கும்
ஒரு வெடிகுண்டைப்போல்
காத்திருக்கிறது மரணம்’
(ஒரு மரணம் சகுனம் பார்க்கிறது)

என எந்தப் புனைவுகளுமற்ற நிலைமையால் உச்சித்துக் காட்டுகிறான் கவிஞன்.

காகம் கத்துவதைக்கூட நிசப்தத்தைக் கலைத்துவிட கங்கணம் கட்டிக்கொண்டிருக்கும் ஒரு செயலாக காண்பதும், பேயையும் வானத்தையும் பார்த்துக் குரைத்த நாய்கள் இப்போ எங்கள் காலங்களுடன் குரைத்துக்கொண்டிருப்பதாகக் காண்பதுமாக கவிதைகொள்கிறது கவிஞனின் சிந்தனை.

வரலாற்றில் தான் சிந்திப்பதை பேச எழுத சுதந்திரங்கள் மறுக்கப்படும்போதெல்லாம் குறியீட்டுத்தன்மையான வெளிப் படுத்தல்கள் அசல் உத்தியாகப் பயன்படுத்தப்பட்டே வந்திருக்கிறது. இது கவிதையில் வரும் சொற்களின் நேரடி அர்த்தத்தைக் கடந்து கவிதை சொல்லவிளையும் பொருளின் அர்த்தத்துள் நம்மை வந்தடையச் செய்கிறது. ‘மூச்சுக் காற்றால் நிறையும் வெளிகள்’ தொகுதியும் தவிர்க்கமுடியாதபடி இந்தக் குறியீட்டு வடிவத்துள்ளும் போய்வருகிறது. ‘குப்பை மேட்டிலிருந்து இலையான் விரட்டும் சொறிநாய் பற்றிய சித்திரம்’, ‘காட்டெருமை’ போன்ற கவிதைகள் நல்ல உதாரணம். இவ்வாறு இன்னும் பல கவிதைகளை இத் தொகுப்பில் காட்டமுடியும். ‘புணர்ச்சி’ என்ற கவிதையை அதன் சொற்களினூடு பயணித்தால் கவிதையில் ஏதும் இருப்பதாகத் தொpயவில்லை. அதை குறியீட்டு வடிவத்துள் மாற்றிப் பார்க்கும் வாசனையின்போது வேறு பரிமாணங்கள் கிடைக்கின்றன.

பேதம், வறுமை பற்றிய சமூக சிந்தனைகளை பொத்தாம் பொதுவாகச் சொல்கிறபோது வெளிப்பாட்டில் வீச்சம் குறைந்துவிடுகிறது. இந்தக் குறைபாடு முரண்பாடுகள் பற்றிய ‘உனக்கும் எனக்குமான இடைவெளி’ என்ற கவிதையில் வெற்றிகொள்ளப்பட்டிருக்கிறது.

போர்நிறுத்தம் மீண்டும் முறிக்கப்பட்டுவிட்டது. இதை ‘மீளவும் மரங்களில் தொங்கி விளையாடலாம்’ என்கிறான் கவிஞன்.

‘ஓடிய சைக்கிளில் இருந்து
இறங்கி நடந்து
ஓடவேண்டியிருக்கிறது.
............................
எல்லாம் சரிபார்த்து மூடப்பட்ட
கைப்பை
மீளவும் திறந்து திறந்து
மூடவேண்டியிருக்கிறது.
என் அடையாளங்கள் அனைத்தும்
சரியாகவே உள்ளன.
என்றாலும்
எடுக்கவும் பார்க்கவும் வைக்கவும் வேண்டியிருக்;கிறது.
என்ன இது?
(மீளவும் மரங்களில் தொங்கி விளையாடலாம்)

இந்தக் கேள்வி திரும்பத் திரும்ப ஒலிக்கிறபோது பலரிடம் விரக்திநிலை தொற்றிவிடுகிறது. ‘எல்லாமே இயல்பாயுள்ளன’,

தூசிபடிந்த சாய்மனைக் கதிரை நாட்கள்’ போன்ற கவிதைகள் இதை வெளிப்படுத்துகின்றன. மனித மனங்களை, நீண்ட யுத்தகால வாழ்வை, அதன் எச்சங்களை நாம் புரிந்துகொண்டால் இக் கவிதை சொல்லவரும் சேதியுடன் நாம் பயணிக்கலாம். அதுவே கவிஞனின் போக்காக மொழிபெயர்க்கப்படுவது அபத்தம். இக்கட்டான காலங்களிலெல்லாம் மிக நம்பிக்கையுடன் கவிதைகள் பேசுவதை இத் தொகுதியுள் பல இடங்களில் காணலாம். நம்பிக்கை யின்மையுடன் வெளிப்படும் கவிதைகளும் நிராகரிப்புக்கு உரியன அல்ல.

கவிதையின் வெளிப்பாட்டுத் தளத்தில் சொற்சேர்க்கைகள் சிலவேளைகளில் ஒரு கவிதைபோலவே ஆகிவிடுகின்றன. அவ்வளவு அர்த்தத்தை அவை பொதிந்துவிடுகின்றன. இத் தொகுதியுள்ளும் கவிதையின் சில தலைப்புக்குள் மட்டுமன்றி, கவிதைக்குள்ளும் ‘அந்நியகால இருள்’, ‘ஒரு தொகைக் காற்று’ போன்ற சொல்லாளுமை கவிஞனிடம் விளைவதையும் நாம் அவதானிக்கலாம்.

இறுதியாக,
‘மனிதனைக் கொல்ல
சகுனம் பார்த்துக் கொண்டிருக்கும் மரணத்துடன்
கண்களும் காதுகளும் இருந்தும்கூட
பலர்
வீதிகளில் கைகுலுக்கிக் கொள்கிறார்கள்’
(ஒரு மரணம் சகுனம் பார்க்கிறது)

என்ற கவிஞனின் வரிகள் மீண்டும் மீண்டும் புதுப்பிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது இதை எழுதும்போதுகூட!

‘இந்தக் கவிதையின் ஆத்மா
துடித்துக்கொண்டிருக்கிறது’ என்பேன் நான்.

11.05.2008 - ரவி (சுவிஸ்) -

------------------

என்னுரை

என் கவிதைகள்...

இவை என் கவிதைகள். அவ்வப்போது படைப்பு மனோநிலை ஏற்பட்டபோதெல்லாம் எழுதியவை. கடந்த 92 நவம்பர் மல்லிகையில் பிரசுரமாகிய ‘விடிவு’ என்ற என் முதற்கவிதையுடன் இந்தப் பயணம் ஆரம்பமாகியது. அப்பொழுதிருந்து எழுதியவைகளில் பிரசுரத்திற்கு ஏற்ற ஒரு தொகுதி கவிதைகளை உங்கள் முன் வைத்துள்ளேன்.

என்னைப் பாதித்தவை, நான் அறிந்தவை, என்னை சிந்திக்க வைத்தவை, என் வாசிப்பின்போது நான் பெற்ற அனுபவங்களின் அடியாகப் பிறந்தவைகளே இக்கவிதைகள்.

கவிதைகள் உணர்வினை வெளிப்படுத்துகின்ற அதேவேளை தர்க்கத்திற்கும் உட்பட்டதாக இருக்கவேண்டும் என்பதிலும் எனக்கு நம்பிக்கை உண்டு. சில சந்தர்ப்பங்களில் கட்டற்ற வெளியை நோக்கி பயணம் செய்யவும் என் கவிதைகளை அனுமதித்திருக்கிறேன். இவற்றுள் சில நேரடியானவை. சில குறியீடானவை.

இந்தச் சமூக மாந்தர்களில் நானும் ஒருவன் என்ற வகையில் ஒரு சாதாரண மனிதனுக்கு இருக்கக்கூடிய பலம் பலவீனங்களுடன் இக்கவிதைகள் வெளிப்பட்டுள்ளன என எண்ணுகிறேன். இவற்றின் தரம் தரமின்மை அறிந்து ஏற்றுக் கொள்ளவேண்டியது வாசகர்களாகிய நீங்கள்தான்.

நான்...
பாடசாலைக் கல்வியோடு இலக்கியத்தின் மீதான எனது ஆர்வமும் தேடலும் ஈடுபாடும் பல்கலைக்கழகக் கல்வியில் ஒரு தெளிவான பார்வைக்கு வழிவகுத்தன. அதன் பின்னர் நண்பர்கள் பலர் ஒன்று சேர்ந்து ‘கலை இலக்கிய சாகரம்’ என்ற இலக்கிய அமைப்பில் ஒன்றிணைந்து கெருடாவில் தொண்டைமானாற்றில் செயற்பட்டபோது எமக்குள் பல புரிதல்கள் ஏற்படவும் வழிவகுத்தன. அதன்போதான ‘சக்தி’ சஞ்சிகை வெளியீடு, என்னூர் அண்ணா சனசமூக நிலையத்தில் இணைந்து செயற்பட்டது... எல்லாம் கலை இலக்கியத்தின் மீதான விருப்பத்தைத் தூண்டக் காரணமாக அமையலாயின.

வவுனியாவில் ஆசிரியப் பணி கிடைத்தபின்னர் அப்பிரதேசத்தை என் கவிதை மனம் உள்வாங்கிய விதமும் பல கவிதைகளில் பதிவுபெற்றுள்ளன. இவ்வாறாக என் பயணத்தின் ஊடே பல தரிசனங்கள் எனக்கு ஏற்பட்டன. கவிதைகள் எழுதியபோதும் அவற்றை எழுதி முடித்து பிரசுரமானபோதும் அவை எனக்குள் ஏற்படுத்திய அனுபவ உணர்வு வெளிகள் வித்தியாசமானவை. அவை உங்களுக்கு என்ன உணர்வினை ஏற்படுத்தும் என்பதும் உங்களைப் பொறுத்தது.

சில கவிதைகள் இதுவரை பிரசுரத்திற்கு அனுப்பப் படாதவை. அவற்றையும் இத்தொகுப்பில் சேர்த்துள்ளேன். பிரசுரமான கவிதைகளில் சில திருத்தங்களும் செய்துள்ளேன்.

காரணமானவர்கள்...

இத்தொகுப்பு வேலையின்போது ஆலோசனைகளை வழங்கி உதவியிருந்த விமர்சகரும் எழுத்தாளருமான அ. யேசுராசா, தமிழ்த்துறை விரிவுரையாளர்கள் க. அருந்தாகரன், ஈ. குமரன், இலக்கிய ஆர்வலரும் எழுத்தாளருமான ச. இரத்தினசேகரன், ஆகியோரை நன்றியுடன் நினைக்கிறேன்.

என் முயற்சிகளை ஊக்குவிக்கின்ற எழுத்தாளர் தெணியான், கலாநிதி த. கலாமணி, த. தவேந்திரராஜா, செ. சதானந்தன், மு.இரத்தினம், வே. பரமானந்தம், ஆ. ஆழ்வாப்பிள்ளை, சி.சோமசுந்தரம், பு. சாந்தரூபன், கி. யோகநாதன், த. சந்திரபோஸ் ஆகியோருடன் நான் நேசிக்கும் பெரியவர்களையும் நண்பர்களையும் இந்நேரத்தில் நினைத்துக் கொள்கிறேன்.

நான் கேட்டபோது மனநிறைவோடு அணிந்துரையினைத்; தந்துதவிய என் ஆசான் பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா அவர்களுக்கும், மிகக் குறுகியகால நட்பில் இத்தொகுப்புப் பற்றிய தனது பார்வையைப் பதிவு செய்த கவிஞர் ரவி (சுவிஸ்) அவர்களுக்கும், அதற்குக் காரணமாக இருந்த புலம்பெயர் எழுத்துலக நண்பி றஞ்சி (சுவிஸ்) அவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தொகுப்புக்கான அட்டைப்பட ஓவியத்தினை வரைந்து தந்துதவி வடிவமைப்பிலும் உதவிய மதிப்புக்குரிய ஓவியர் தா. சனாதனன் அவர்களுக்கும், உள் ஓவியங்களை வரைந்து தந்துதவிய மூத்த ஓவியர் மதிப்புக்குரிய கோ. கைலாசநாதன் அவர்களுக்கும், தம்பி எஸ். நேசனுக்கும் உளம் நிறைந்த நன்றி.

இக்கவிதைகளை அவ்வப்போது பிரசுரித்த பத்திரிகை, சஞ்சிகை, ஆண்டுமலர், கவிதைத் தொகுப்பு, இணையத்தள சஞ்சிகை ஆகியவற்றின் ஆசிரியர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்நூலினை அழகாக அச்சிட்டு நூலுருவாக்கித் தந்திருக்கும் மதுரன் கிறாபிக்ஸ் சு. மகேஸ்வரன், அட்டையை அச்சிட்ட ஹரிகணன் பிறின்டேர்ஸ் ஆகியோருக்கும் என் நன்றி.

முன்னர் நான் தொகுத்திருந்த ‘வெளிநாட்டுக் கதை’ களுக்கு மட்டுமல்லாமல் இத்தொகுப்பிலும் பிரதிகளை செவ்வை பார்ப்பதில் உதவிய சி. விமலன் அவர்களுக்கும், கவிதைப் பிரதிகளை அவ்வப்போது பார்த்து தன் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் வழங்கி என் முயற்சிகளை ஊக்குவிக் கின்ற என் மாமா ம. கணேசலிங்கம் அவர்களுக்கும் என் நன்றி.

என் முயற்சிக்கும் வளர்ச்சிக்கும் மூல ஊற்றாக இருக்கும் என் அப்பா, அம்மா, பெரியம்மா ஆகியோரின் அன்புக்கும், எப்போதும் என் கவிதைகளின் முதல் வாசகர்களாக இருக்கும் சகோதரர்களுக்கும், என் பிரிய ‘கெளரி’க்கும், தொடர்ந்தும் எனக்கான சூழலைத் தந்துகொண்டிருக்கும் என் குடும்பத்தாருக்கும் அன்பு கலந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தினைப்புனம் சு. குணேஸ்வரன்
மயிலிட்டி (துவாரகன்)
அல்வாய் e.mail:- mskwaran@yahoo.com 02.08.2008 kuneswaran@gmail.com


----------------------------

நன்றி

மல்லிகை
புதிய உலகம்
சக்தி
தூண்டி
புதிய தரிசனம்
உயிர்நிழல் (பிரான்ஸ்)
கலைமுகம்
ஜீவநதி
தாயகம்
காலைக்கதிர்
உதயன்
சஞ்சீவி
நமது ஈழநாடு
தினக்குரல்
கவிதைச்சரம்
தேடல்
திருவுடையாள்
www. vaarppu.com
www. thinnai.com
www. uyirnizhal.com
www. Pathivukal.com
www.adhikaalai.com
-----------------------


உள்ளே

குதித்தோடும் மனசு 01
நீட்சி 03
மனிதத்தைத் தேடி 04
மரம் 07
மெளனமாகவே 08
தூக்கணாங்குருவிக் கூடு 09
நினைவுகள் 11
ஞாபகம் 12
என்னருகில் நீ இல்லாதபோது 13
நானும் நாட்களும் 14
உனக்கும் எனக்குமான இடைவெளி 15
சின்னப் பூ 17
பேதம் 20
யாழ்ப்பாணம் 2005 21
முதுகு முறிய பொதிசுமக்கும் ஒட்டகங்கள்22
வண்ணத்துப் பூச்சிகளின் உரையாடல் 24
எங்களுர்க் கலியாணம் 26
நெடுஞ்சாலைப் பயணம் 27
காட்டெருமை 28
எலியும் அறணையும் காpக்குருவியும் 30
குருட்டு வெளிச்சமும் ஊமை நாடகமும் 31
தீர்ப்பு 33
மீளவும் மரங்களில் தொங்கி விளையாடலாம் 34
வெள்ளெலிகளுடன் வாழ்தல் 36
நாய் குரைப்பு 38
என்னை விரட்டிக் கொண்டிருக்கும் தலைகள் 40
தவம் 42
மனிதர்கள் போலவே 43
எச்சம் 44
பாதிச்சுவர் 46
கைவீசி நடந்து 48
அலைவும் தொலைவும் 50
ஒரு பெருந்துயரின் பாடல் 51
ஒரு மரணம் சகுனம் பார்க்கிறது 53
மழை ஓவியம் 54
கடற்கரை மட்டும் 55
குப்பை மேட்டிலிருந்து இலையான் விரட்டும்... 56
தூசி படிந்த சாய்மனைக்கதிரை நாட்கள் 58
யாரோ எங்களைக் களவாடிச் செல்கிறார்கள் 60
நானும் நானும் 62
மனிதர்கள் இல்லாத பொழுதுகள் 64
புணர்ச்சி 65
பல் நா சுவையறியாது 67
கோழி இறகும் காகங்களும் 69
கண்களைப் பற்றி எழுதுதல் 71
எல்லாமே இயல்பாயுள்ளன 73
மூச்சுக்காற்றால் நிறையும் வெளிகள் 74
------------------------------------------------------------------

குதித்தோடும் மனசு

மனசு இலேசாயிருக்கிறது.
தோட்டவெளி
ஓற்றைப் பூவரசமர இலைகள்
கரும்பச்சை நிறத்தில் மதாளித்து
காற்றில் அசைந்தாடும்போது.
புதிதாய்ப் பிடுங்கிப் போட்ட
கோரைப் புல்லை ‘மொறுக்’ கென
ஆடுகள் கடித்து
அசைபோடும் போது.
சலசலத்தோடும் வாய்க்கால் நீரில்
முக்குளித்து எழுந்து
சிறகசைக்கும் மைனாக்களைக்
காணும் போது…
மனசு இலேசாயிருக்கிறது.
கருமேகம் சூழ்ந்த
எங்கள் வான்பரப்பின்
நிர்மலமான
இந்த அழகைக் காணும்போதெல்லாம்
சிட்டுக்குருவி மனசு
விண்ணில் இறக்கை கட்டுகிறது.
இதுவே எப்போதும் வேண்டும்!

பட்டுப்போன முள்முருக்கில்
பட்டை உரித்து
கால்களில்…
பந்தாகச் சுருட்டிக் கொண்டோடு;ம்
அந்த வால்நீண்ட
எங்கள் மாமரத்து அணில்களைக்
காணும்போதும் கூட,
இந்த மனசும்
பின்னால்
வால் முளைத்துக்
குதித்தோடி விடுகிறது.
25.12.2003
--------------

நீட்சி

ஒவ்வொரு விடுமுறையின் பின்னரும்
எனது தூசிபடர்ந்த அறையை
துடைப்பத்தால் சுத்தம் செய்யும்போது
தலைதெறித்து ஓடும்
சிலந்திகளும் பூச்சிகளும்
என் வாழ்வை
எனக்கே கற்பிக்கின்றன.

எட்டுக்கால் ஊன்றி
சுவர்களில் ஏறித் தப்பிக் கொள்ளவும்
கூரையின் மர இடுக்குகளில்
மறைந்து விடவும் மட்டுமே
தொpந்தவை அவை.

வாழ்வின் நீட்சியை மோகிக்கும்
இந்த ஆத்மாவோ
நான்கு புறமும் இழுத்துக் கட்டப்பட்ட
கூரையின் படங்குபோல்
காற்றில் அலைப்புறுகிறது.

எப்போதும்போல் அல்லாமல்
என் முன்னால் வந்தமர்ந்து
தன் அழகாலும்...
அலையலையான வாலின் அசைவாலும்
மீண்டும் மீண்டும்
என்னைக் கவர்ந்து செல்லும்
அந்த வால்க்குருவியின்
அழகிய உலகில் சஞ்சரிக்கவே
இந்த ஆத்மா இன்னமும் பிரயாசைப்படுகிறது.
25.09.2004
---------------

மனிதத்தைத் தேடி

யாரைத் தேடுகிறாய்?
எதைத் தேடுகிறாய்?
தேடு… தேடு… தேடிக்கொண்டேயிரு!
இரத்தக் கறை படிந்த
இந்தத் தேசத்தில்
தேடிக்கொண்டேயிரு!
முகங்களைத் தொலைத்த
உன் மூதாதையரும் தேடினர்
நீயும் தேடு

கருமலைகளான இருண்ட தேசத்தில்
கலங்கரை விளக்குப் போல்
உன் விளக்கை
நன்றாக உயர்த்திப் பிடி.
துலங்க விடு
தேசத்தின் எல்லைகளை
நன்றாகக் கணக்கெடுத்துக்கொள்.

உன் அப்பன்… முப்பாட்டன்…
பதித்த பாதச் சுவடுகளும் தென்படும்.
மெதுவாக மிக மெதுவாக
உன் கால்களை எடுத்துவை.
மிதிபடும் கால்களில்
மிதிவெடிகளும் இருக்கக் கூடும்
பார்த்து நட
புதிதாய் வெட்டிய குழிகளும் இருக்கலாம்.
கல்லறைகளான மணற்திட்டுகளும்
முகங்காட்டும்
மறந்தும் தனியனாய் சென்றிடாதே
காக்கை குருவிகள்போல்,
உதவிக்கு யாரையாவது
உரத்துக் கூப்பிடு.
ஆனாலும் கவனம்
வருபவனும் கூட…

உன் உடலில்
உரம் உள்ளவரை
எங்கும் தேடிப்பார்.
வீட்டில்… வீதியோரத்தில்…
மண்ணில்… மாளிகையில்….
என்ன நின்றுவிட்டாயா?
ஏன்? வாயைத் திறந்து சொல்?

மனிதனா?
அட பைத்தியமே,
மனிதமே தொலைந்த தேசத்தில்
மனிதனைத் தேடுகிறாயா?
அதோ பார்.
பாரதியின் சிட்டுக்குருவி
விடுதலை அவாவிய சிட்டுக்குருவி *
அதற்காக என்றாலும்;
இந்தத் தேசத்தின் மூலையில்
யாரோ ஒருவன்
நாலைந்து நெல்மணிகள்
தேடிக் கொண்டிருப்பான்.
நன்றியுள்ள ஜீவனுக்கு
ஒரு எஜமான் போல.

முதலில்
இந்த விளக்கை அணைத்து வை.
உன் உள்ளொளியைத் தூண்டு.
காது கொடுத்துக் கேள்.
இன்னமும்;
மனிதத்தைத் தேடி…
இந்தத் தேசத்தின் ஆத்மா
துடித்துக் கொண்டேயிருக்கிறது!
மார்ச் 1999

* அகங்களும் முகங்களும்
கவிஞர் சு. வில்வரத்தினம்
------------------------------------

மரம்

அந்த மரம் அமைதியாக நிற்கிறது
துளிர்த்து சிலிர்த்து
விருட்சமாகி விழுதுவிட்ட மரம்.

ஆழப்பதிந்த வேர்களுடன்
வீரியமாய்
சூரியக் கதிரின் வெம்மைக்கு
மாலைநேரத் தென்றல்போல்
குளிர்ச்சி தரும்
நிழல் தந்த மரம்.

மின்னற் கீற்றின் கோடுகளாக
கிளைகள் மட்டும் மிகத் தெளிவாக
பனியில் உறைந்து
மரத்துவிட்ட மரம் போலவே.
வசந்த காலத்தில்
படரும் பசுமையுடன்
சரசரக்கும் இலைகளுக்காக
இன்னமும் அந்த மரம்
அமைதியாக நிற்கிறது

வெறும் கட்டையாக அல்ல.
உயிர்ப்புடன்.
வசந்தத்தை எதிர்பார்த்தபடியே!
1998

* சுராவின் மொழிபெயர்ப்புக் கவிதை ஒன்றின் அருட்டுணர்வு
---------------------------------------------------------------------------------

மெளனமாகவே...

நீண்ட நேரமாக இருந்த
நிசப்தத்தைக் கலைத்தபடி
திறந்து வைத்த யன்னலூடாக
ஓடிவந்த காற்று
விரித்து வைத்த புத்தகத்தின்
பக்கங்களைப் புரட்டிக் கொண்டிருக்கிறது.

மாமரத்திலிருந்து காய்ந்து விழுந்த
சருகுகள்...
யாரின் காலடியும் படாமல் மெளனித்திருக்க
எங்கிருந்தோ வந்த
ஒரு தொகைக் காற்று
ஓடி வரும் ஒரு குட்டிச் சிறுவனைப்போல்
எல்லாவற்றையும் அள்ளிச் செல்கிறது.
குசினி யன்னல் கம்பியூடாக உள்நுழைந்த
சின்னஞ்சிறிய அணிற்பிள்ளை ஒன்று
சிதறுண்டு மிச்சமாயிருந்த
சோற்றுப் பருக்கைகளுக்காக
இரண்டு கால்களை ஊன்றி
எட்டிப் பார்த்தபடி
வருவதும் போவதுமாய்.

வேலியோரப் பூவரசில் இருந்து
விக்கல் எடுத்தாற்போல்
அடிக்கடி கரைந்து கொண்டு
எப்படியும் இந்த நிசப்தத்தைக் குலைத்துவிட
கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறது
காகமொன்று.

எனது நான் மட்டும்
நீண்ட நேரமாக
யாருக்கும் தெரியாமல்
என்னுடனேயே பேசிக் கொண்டிருக்கிறது.
அந்த நிசப்தத்தை குலைத்துவிடாதபடிக்கு…
மிக மெளனமாகவே!
17.08.2004
---------------

தூக்கணாங்குருவிக்கூடு

அந்தப் பெருமரத்தில்
மிக இலாவகமாகத் தூங்கும்
தூக்கணாங் குருவிக் கூடுகள்.

காற்றையே எதிர்கொண்டு
வாழச் சபிக்கப்பட்டவை போல்
தூங்கும் கூடுகள் அவை
கைதேர்ந்த கலைஞனின் சித்திரத் தேர்போல்
ஒவ்வொரு தும்பாகத் தேடியெடுத்து
மரக்கொப்பரின் நுனியில்
கட்டிய கூடுகள் அவை

சாரைப்பாம்பின் முட்டை குடித்தலுக்கும்
குரங்கின் குலைத்துப் போடலுக்கும்
எட்டாமற் போனதும்
குருவிகளின் வாழ்வுப் போராட்டமே.

அந்த விழுதுகள்விட்ட
பெருமரத்தில்
தூங்கும் கூடுகளைச் சிதைத்துவிட
காற்றுடன் சல்லாபிக்கிறது
சாரைப் பாம்பு.

கூடுகளைத் தாங்கும் வலிய கிளைகளும்,
ஆழ ஊன்றிய வேர்களும் உள்ளவரை…
முடியுமா என்ன?
மரம் வலியன்.
அதன் வாழ்வோடு வாழும்
கூடுகளும் வலியன்.
ஊழிக்காலம் முடியும் வரை!
09.08.2004
---------------

நினைவுகள்

ஆழப்பதிந்து விட்ட
ஆத்மார்த்த நினைவுகள்
இந்த சஞ்சாரமே
மெளனமாகும் வேளை
மெல்ல முகங்காட்டும்
நட்பின் அலைகள்
மீண்டும்
மீண்டு வரும்போது
நெஞ்சம் தத்தளிக்கும்.
பிரிவின் எல்லைகள்
வேதனையின் விம்மல்கள்
இழப்பின் துயரங்கள்
இன்னும் நினைவுகளானால்…
மீள்வது எப்படி?
ஆத்மார்த்த நினைவுதான்
என்றாலும்
சில நேரங்களில்
மறக்கத்தான் வேண்டும்.
1997
-------
ஞாபகம்

இரவின் ராகத்தை மீட்கும்
பூச்சிகளின் சில்லென்ற இரைச்சல்.
மெல்லத் திரை விலக்கி
உள்ளம் சேர்த்து வைத்த
உன் நினைவுப் பொதியின்
முடிச்சுக்களை
அவிழ்த்துக் கொட்டுகிறது.
அவை போத்தலிலிருந்து கொட்டிய
மாபிள்களாக
நாலாபக்கமும் சிதறி வீழ்கின்றன.
உன் ஞாபகமாய் இருந்த
எல்லாத் தடங்களையும்
ஒவ்வொன்றாய்
நான் இழந்து விட்ட பின்பும் கூட;
மனிதர்களை இழந்த தெருக்கள் எல்லாம்
உனதான ஞாபகத்தில்
மூச்சடைத்து முகம் புதைத்து
மனது விம்மிப் போகிறது

என்றாலும்
மிக நிதானமாக
தன் உயிர்ப்பை ஞாபகப்படுத்தும்
என் வீட்டுச்
சுவர்மணிக்கூட்டின் ஓசையைப் போல்
இயங்கிக் கொண்டிருக்கிறேன்
இயங்கும் வரை
25-10-2005
---------------

என்னருகில் நீ இல்லாதபோது

உன் வட்டக் கருவிழிகளின்
ஆழத்தில்
என் வார்த்தைகளைத் தொலைத்துவிட்டேன்.
தட்டுத் தடுமாறி முட்டிமோதி
என் சத்தமற்ற வார்த்தைகள் எல்லாம்
உன் விழிகளுடன் பேசிவிட்டு
ஏதோ பதில்களுடன்
திரும்பி வருகின்றன.
உதட்டசைப்பால் மட்டும்
பேசிடும் வார்த்தைகளை விட
உன் விழியசைப்பால்
பேசிடும் வார்த்தைகள் அதிகமடி.
ஊரின் ஓசை
இரவில் உறங்கும் போதெல்லாம்
என் எண்ணத்தின் ஓசைகள் மட்டும்
விழித்துவிடுகின்றன.

என்னருகில் நீ இல்லாதபோதெல்லாம்
உன் வட்டக் கருவிழிகள் மட்டும்
என்னோடு… என்னருகில்… எப்போதும்…
மெளனமான பரிபாசைகளுடன்
ஏதேதோ கூறியபடியே.
2004
-------

நானும் நாட்களும்

அந்தப் பெருவீதியின் சந்தடியிலிருந்து
நீங்கியாயிற்று
கிளை பிரிந்தோடும் ‘கிரவல்’ செம்மண் பாதை
எனது பழைய சைக்கிள் பயணம்
தனிவழிப் பயணம்
இன்று ஞாயிற்றுக்கிழமை
நாளைக் காலைப் பொழுதின்
கடமைக்கான பயணம்
‘ஏன் திங்கள் காலை போனால் என்ன?’
அவளின் கேள்வியூடே கலங்கிய மனது
இருமருங்கும் கிளை பிரிந்து நிற்கும்
பசிய மரங்களோடு
நீண்டு செல்லும் பாதை
என் முன்னால்
செம்மண் புழுதி கிளப்பிக் கொண்டு
தொண்டு நிறுவனமொன்றின் வாகனம்
என்னைக் கடக்கிறது.

மாலைநேர மஞ்சள் வெய்யில்
பட்டுப் போய் கிளைபிரிந்த மரத்தின் அழகை
கூடவே காட்டுகிறது
‘எப்பிடியும் வெள்ளி வந்திடவேணும்’
எனது பயணப்பையைத் தந்தபடியே கூறினாள்.
ரயரில் அகப்பட்ட குருணிக் கல்லொன்று
எனது ரவுசரில் பட்டுத் தெறித்தது.
காலையில் கேட்ட
உன்னிகிருஷ்ணனின்
இனிய பாடலொன்றை ஞாபகப்படுத்துவதில்
மீண்டும் மீண்டும் நான் தோற்றுப் போகிறேன்
என்னைக் கடந்து சென்ற வாகனம்
புழுதி கிளப்பிக் கொண்டு வருகிறது
திரும்பி விட்டது போலும்.
2005
------

உனக்கும் எனக்குமான இடைவெளி

இந்த முரண்பாடுகள்
எங்கிருந்து முளைக்கின்றன என்று
எனக்குப் புரிவதேயில்லை
உன்னைக் காணும்போது
நீ… மெல்லிய புன்னகையில் இருப்பாய்
எல்லாம் வழமையானதுதான்…
நினைத்துக் கொள்வேன்.
மின்னாமல் முழங்காமல்
மழை கொட்டினாற்போல்
நீ முரண்படத் தொடங்கி விடுவாய்
அது எங்கேயிருந்துதான் முளைக்கின்றது என
பல வேளைகளில்
எனக்குப் புரிவதேயில்லை

பத்திரிகை பார்க்கும் நேரம் சற்று நீண்டாலும்
பஸ்ஸில் நண்பியைக் கண்டு
கதைத்ததாகக் கூறியதாலும் இருக்கலாம்
ஒரு புதியபொருள் வாங்கியதாலும் இருக்கலாம்
சில வேளைகளில் உனது அழைப்புக்கு
செவிசாய்க்க சற்றுத் தாமதித்த போதும் இருக்கலாம்

இந்த முரண்பாடுகள்
எந்தப் புள்ளியில் இருந்து
முளைக்கின்றன என்று
எனக்குப் புரிவதேயில்லை

மழை பெய்தபின்
மண்ணிலிருந்து முளைக்கும்
கரும் அட்டைகள்போல்;
உன் முரண்பாடுகள்
என் முன்னால் முளைத்து விடுகின்றன.
ஆனாலும்;
வந்த இடமும் தெரியாமல்
காரணமும் புரியாமல்
திண்டாடும் போது…
உன்னை அமைதிப்படுத்துவதைத் தவிர
வேறு எதுவும் புரிவதில்லை.

முரண்பாடே எதுவெனப் புரியாமல்
எப்படிக் காரணம் கற்பிக்க முடியும்?

ஆனாலும்
கூடு கலையாமல் இருப்பதற்காக
இந்த முரண்பாடுகளில்
அதிகமும் தீர்க்கப்பட்டு விடுகின்றன
ஏதோ ஒரு முற்றுப்புள்ளியில்
18.03.2006
--------------

சின்னப் பூ

கந்தல் ஆடை…கலைந்த கேசம்…
கைகளிடையே கழுவும் பாத்திரம்
களங்கமில்லா நெஞ்சில்
கனத்த வாழ்வின் சுமை

எல்லையற்ற வானத்தில்
சிறகடித்து வட்டமிட்டுக் களிக்கும்
சிட்டுக்குருவி ஒன்று சிறகையிழந்தபடி…
வறண்ட மண்ணில் வேரோடிய மரத்தின்
சிலிர்ப்பற்ற பூவாக
சோபையிழந்திருக்கிறது

வசந்தத்தின் சாரலில்
கூவிக் களிக்கவேண்டிய குயிலொன்று,
கோடை வெய்யிலில்
கோலம் கலைந்திருக்கிறது
பள்ளிவாழ்வின் பசுமையில்
துளிர்க்க வேண்டிய வாசமலர்
வறுமையின் ஏப்பத்திற்கு
வயிறு கழுவிக் கொண்டிருக்கிறது
அழகுச் சித்திரத்திற்கு
வர்ணம் பூசவேண்டிய கரங்கள்
இங்கு சிதைந்த வாழ்வுக்காக
அழுக்குத் தேய்க்கிறது
பேனா முனைகளின் செப்பனிட்ட வாழ்வில்…
விண்ணோக்கிய விரைவில்…
கணனியின் கடுகதியில்…

நீ மட்டும்,
வெறும் பாத்திரம் கழுவும்
பாத்திரமாகி விட்டாயா?
உனக்கு வறுமையைச் சுமக்கும் வயதல்ல
புத்தகப்பை சுமக்கும் வயது
பட்டாம்பூச்சி இறக்கை கட்டும் பருவம்

வர்ணஜாலம் பார்த்து…
வடிவம் பார்த்து…
வாய்வல்லமை காட்டி…
பெற்றோரைக் கட்டி வைக்கும் பாசப்பிணைப்பை
எங்கேயம்மா தொலைய விட்டாய்?

உன் சிங்கார ஆசை
சிலிர்த்து நிற்கும் பனிபடர்ந்த அழகு
உன் மழலைமொழி
சோதர பாசம்
துள்ளி வரும் துடிப்பு
எல்லாம்;
எங்குதான் பஞ்சாய்ப் பறந்ததம்மா?

உன் வயதுச் சிறுமி
பள்ளிக்குத் துள்ளித் திரிகையிலே
பாதையோரத்தில்
நீ மட்டும்...
கரியவிழிக் கண்ணீர்ப் படலத்தில்
கரைந்து கொண்டிருப்பாயா?
இ;ல்லையேல்;
அடுத்த வேளைப் பசியின் வேண்டுதலுக்கு
தங்குமிடம் தேடுவாயா?

உனக்கு மட்டும் தொலைந்த வாழ்வு
இல்லாமலா போய்விடும்?
இரவும்… பகலும்…
கோடையும்… வசந்தமும்…
சிதைவும்… வாழ்வும்…
எல்லாம் இணைந்ததுதான்!
கர்ணனைக் காக்க
ஒரு தேரோட்டிபோல்…
இந்த மனிதருள்ளும்
ஒரு மனிதமுள்ளவன்

சின்னப் பூவே;
உனக்கென்று ஒரு வாழ்வு
உன் பிஞ்சுக் கைகளைப் போல…
உன்னைக் காக்க
உன் தொலைந்த வாழ்வு
மீண்டும் மலரும்!
1998
------

பேதம்

நீ எப்போதும் இப்படித்தான்
நீ மட்டுமா? நீங்கள் எல்லோரும்தான்
எங்கும் எதிலும் எப்போதும்
நீரில் நிலத்தில் மண்ணில் மரத்தில்
அத்தோடு விட்டாயா?
கடவுளுக்குக் கூட பேதம் கற்பிக்க
முனைந்து விட்டாய்
மழையும் மண்ணும்
எப்போதும் உனக்குரியதும் அல்ல
உள்ளுயிரும் கூட ஒன்றுதான்.
காற்றில் பிய்த்தெறியப்பட்ட பஞ்சாக
எங்கும் உன் பேதத்தின் வேதனைகள்
ஆனாலும்;
உனக்கு மட்டுமல்ல
எல்லோருக்கும்
கருவறையும் கல்லறையும் ஒன்றுதானே!
25.11.1998
---------------

யாழ்ப்பாணம் 2005

கைத்தொலைபேசி சப்பித்துப்பிய
கிற் காட்
வெட்டி வெட்டிப் படம் காட்டியதால்
கழித்து விடப்பட்ட சீடி
வாசனை முடிந்து வெளியே வீசிய
சென்ற் போத்தல்
உயிர்ப்பை இழந்து கழற்றி எறியப்பட்ட
போக்மன்ற் பற்றரி
உறிஞ்சி இழுத்து முடித்து
காலில் நசிபடும்
சிகரெட் அடிக்கட்டை
லீற்றர் அளவுக்கும் உதவாத
வெற்றுச் சாராயப்போத்தல்
எல்லாமே முடிந்து போனவை
தூரவீசப்பட்டவை

ஆனால்
எல்லோரும் பார்த்திருக்க...
இன்னமும் எங்கள் தெருக்களில்
பரட்டைத் தலையுடன் கையேந்துகிறார்கள்
பள்ளி செல்ல மறந்த சிறுவர்கள்
29.08.2005
--------------

முதுகு முறிய பொதிசுமக்கும் ஒட்டகங்கள்

நாங்கள் பொதி சுமக்கும் ஒட்டகங்கள்
முதுகு முறிய பொதிசுமக்கும் ஒட்டகங்கள்

மூச்சிரைக்க இழுத்துச் செல்லும்
வண்டில் மாடுகள் போல்
நாங்கள்
முதுகுமுறிய பாரம் சுமக்க தயாராய் இருக்கிறோம்

சாட்டையும் விரட்டும் இலாவகமும்
உங்களிடம் இருக்கும் வரை
நாமும் சுமந்துகொண்டே இருப்போம்

செல்லும் தூரமோ
பொதிகளின் அளவோ
எதைப் பற்றியும் நீங்கள்
கணக்கிடத் தேவையில்லை
ஏனெனில் சுமக்கப் போவது நாங்கள்தானே

ஓய்வு கிடைக்கும்போது அசைபோடவும்
நீர் கண்டபோது நிரப்பவும்
பாலைவனம் கடப்பதற்கு உம்மைச் சுமக்கவும்
நாங்கள் ஒட்டகங்கள் தயாராய் இருக்கிறோம்

இன்னமும் வானம் பார்க்கும் கூரையும்
சில்லறை பொறுக்கும் கரங்களும்
கூடவே எங்களுடன்தான்

என்றாலும் நீங்களும் நாங்களும்
சாப்பிடுவது ஒரு சாண் வயிற்றுக்குத்தானே.
04.09.2007
--------------

வண்ணத்துப்பூச்சிகளின் உரையாடல்

வண்ணத்துப்பூச்சிகளின் உரையாடல்
இன்னமும் தொடர்கிறது
வானவில் நிறம் காட்டி
கலர் கலராய்ப் பறக்கும் பூச்சிகள் அவை

அப்பொழுதிருந்தே இந்த வண்ணத்துப்பூச்சிகளும்
வானவில் நிறங்களும்
இருந்ததென்றுதான் சொல்கிறார்கள்
வானவில் நிறங்கள்
மழை நீரில் அழிந்து விடும் என்றும் சொன்னார்கள்
அது பொய்
அது காலம் காலமாய் உயிர்வாழ்கிறது
வானவில் நிறங்களுடன்
இன்னமும் வாழும் போலிருக்கிறது

தனிவெள்ளை சாம்பல் சிவப்பு கறுப்பு
இன்னும் பொட்டுப்போல்
பலவண்ணப் பூச்சிகள்
ஒவ்வொன்றும்
கூட்டத்தோடு பறக்கும்போது
பார்க்க அழகுதான்

எப்போதும் ஓரினப் பூச்சிகள்
ஒன்றாகவே பறப்பதுண்டு
கலந்து திரிவனவும் உண்டு
தேன்குடிக்கும் பூச்சிகள்
எவ்வூரும் செல்லும்
தேடித்தேடித் தேனெடுக்கும்
ஆனாலும் அவை எல்லாம்
ஒன்றாய்ப் பறந்ததும் இருந்ததும்
மிக அரிது

இந்த வண்ணத்துப்பூச்சிகளுடன்
கூர்வாள் உணர்கொம்பு கொண்டவையும்
இப்போ பறக்கத் தொடங்கிவிட்டன
அவை தம் உணர்கொம்புகளைக் காட்டிப்
பயமுறுத்துகின்றன
அவற்றுடன் இவை எப்போதும் ஒட்டியதுமில்லை
சேர்ந்து தேனெடுக்க விரும்பியதுமில்லை
ஆனாலும்... அவையிப்போ
எல்லா நிற வண்ணத்துப்பூச்சிகளையும்
நன்றாக இனங்காணத் தொடங்கிவிட்டன.
சிலவேளை;
தேனெடுக்கும் சோலைகளில் வழிமறித்து கேட்கின்றன
நிறமறிந்து…
‘நீ வானவில் நிறமா? தனித்தனி நிறமா?’ என்று
இவை எப்போதும் சொல்லிக் கொள்கின்றன
‘நாங்கள் வண்ணத்துப் பூச்சிகள்’ என்று
ஆனாலும் தனித்தனிக் குரல்களில்

வண்ணத்துப் பூச்சிகளின் கேள்வியோ
பூமியை முட்டிவிட்டது
கூர்வாள் உணர்கொம்புகளும்…
கேட்கத் தொடங்கிவிட்டால்?
மூச்சு முட்டுகிறது
செத்துவிடலாம் போலிருக்கிறது
செட்டைகளை பிடுங்கி எறிந்து விட்டு.
17092007110
------------------

எங்களுர்க் கலியாணம்

எங்களுர்க் கலியாணத்திற்கு
பெண்கள் ஆராத்தித் தட்டெடுத்து
வரிசையாய்ச் செல்வதுண்டு

காஞ்சிபுரம் முதல்
விதம் விதமாய் உடுத்தி
தலைநிறையக் கனகாம்பரம் புனைந்து
முகம் மலர்ந்த சிரிப்போடு
எங்களுர்ப் பெண்கள்
தட்டெடுத்துச் செல்வதுண்டு.
கமராக் கண்கள் கவனமாய்ப் படம்பிடிக்க
மெல்லிய வெண்துகில் மூடிய தட்டுக்களுடன்
தாலி கூறை முதல்…
பழம் பணியாரம் கொழுக்கட்டை வரை
வரிசையாய்ப்
பெண்கள் ஏந்திச் செல்வதுண்டு
இப்போதும் அடிக்கடி
மணமக்கள் சீர்வரிசை ஏதுமற்ற
ஆராத்தித் தட்டுப்போல் வரிசைகளை
நாம் காண்பதுண்டு.
துறைமுகத்தில்
சரக்குக் கப்பல் தரித்து விட்டால்
வல்லைவெளி தாண்டி வரிசையாய்ச் செல்லும்
‘லொறி’ களைக் காணும்போதெல்லாம்
எங்களுர்க் கலியாண வீடுகளே ஞாபகம்.
மிக மெதுவாக நடந்து செல்லும்
நிறைமாதக் கர்ப்பிணிப் பெண்போல்
எங்களுர் லொறிகளும்
வல்லைவெளி தாண்டிச் செல்லும்

ஆனால், ஒரு வித்தியாசம்தான்!
எங்களுர்க் கலியாண வீடுகளோ
நிச்சயித்த நாளில் நடக்கும்
லொறிகளோ…
நினைத்தவுடன் வரிசையாய்ச் செல்லும்
30.08.2000
---------------

நெடுஞ்சாலைப் பயணம்

வரிசை குலையாமல் செல்லும்
எறும்புகள்போல்
நெடுஞ்சாலையில் பயணிக்கின்றன
வாகனங்கள்

இந்த மனிதர்கள்
ஒன்றுபடும் பொழுதுகள் மிக அரிது
என்றாலும் பயணங்களில் மட்டும்
இவர்கள் ஒன்றுபட்டு விடுகிறார்கள்
பயணிகளையும் நினைவுகளையும்
நிறைத்துக் கொண்டு
ஓடிக் கொண்டிருக்கிறது பஸ்

ஆசிரியர் இருவர்
தமது வேலை பற்றி விவாதிக்கின்றனர்
நீண்ட இடைவெளியின் பின்
ஊர் நினைவோடு திரும்புகிறான்
ஒரு பழைய மனிதன்
காணாமற்போன தன் பிள்ளை நினைவினூடு
தேடிச் செல்லும் முதிய தாய்
சிறையில் வாடும் மகனை
பார்க்கச் செல்லும் தகப்பன்
விபத்தில் கால் இழந்த பேத்தியை
காணச் செல்லும் பாட்டியம்மா
புதிதாக சந்திக்கும் இருவர்
தமக்குள் இப்பொழுதுதான்
அறிமுகமாகிக் கொண்டிருக்கிறார்கள்

இது எதுவும் தெரியாமல்
பஸ் ஓடிக் கொண்டிருக்கிறது
எல்லோரையும் இணைக்கிறது
அந்த நெடுஞ்சாலையும் பயணமும் மட்டுமே.
2004
--------

காட்டெருமை

காட்டெருமைகளை
இதற்கு முன் நான் நேரே கண்டதில்லை
இப்போ
பல இடங்களில்
என் கண் முன்னால்

வெளிறிய கருமை நிறம்
இரு புறமும் கண்களைக் குத்துமாற்போல்
வளைந்த கொம்புகள்
மூச்சிரைத்தபடி,
நெருப்புப் பொறிபறக்கும் கண்களுடன்
இரண்டாகப் பிணைத்து
நீளத்தடிகளுடன்
வீதியின் குறுக்காக
சாய்த்துச் சென்றனர் இருவர்.
முழுதும் உடல் மறைத்த
சுகமான சேற்றுக் குளியலிலும்
தலை உயர்த்திய கொம்புகளுடன்

இன்னொரு முறை கண்டுள்ளேன்
ஒரு நாள் இரவு
இரண்டு சிரட்டைகளை அடித்தாற்போல்
தடதட சத்தம்
பலகைத்துண்டுகளை கழுத்தில் கோர்த்தபடி
ஒருசோடி காட்டெருமை முன்செல்ல
இரவு மேய்ச்சலுக்குச் சாய்த்துச் சென்றனர்
இருட்டிலும்
பச்சை சிவப்பு கலந்த
அதே நெருப்புக் கண்கள்

வீதியிலும் வயல் வெளிகளிலும்
விரட்டி வரும்போது
சற்றுத் தூர நின்றே
பயத்துடன் பார்த்ததுண்டு

எருதுடன் பிணைத்த காட்டெருமைகளை
பின்னர்தான் அறிந்து கொண்டேன்.
கயிறுபோட்டுப் பிடித்து
கட்டிப்போட்டு
கலப்பையில் பூட்டி
இன்று வயல் உழுகிறது
எருதுடன் காட்டெருமை

இப்போ
நெருப்பை உமிழும்
அதன் கண்களைக் காணவில்லை
மிகச் சாந்தமாக…
அதன் அருகில் நான்.
2004
-------

எலியும் அறணையும் கரிக்குருவியும்

எலி வெட்டிய
உடுத்தமுடியாத சாறம்
எனது படுக்கையின் முதுகில் கிடக்கிறது

புதிதாய்ப் போட்ட
சீமென்ட் தரையென்பதால்
அறையின் மூலையில் சிறிது மணல்போட்டு
அதன்மேல் வட்டத் தகரத்தில்
மூன்று கல் வைத்து
தேநீர் போட
ஒரு சமையலறை தயார்

திறந்த கதவினூடாக
வெய்யில் வெக்கையும் காற்றும்
வந்து முகத்தில் அடிக்கும்
கூரை மரத்தின்
சுவர் இடுக்குகளில் இருந்து புணர்ந்து
சத்தமிட்டு ஓடி
என் நித்திரை குழப்பும் எலிகள்
இடையிடையே இறங்கி வந்து
என் கால் விரல்களையும் கடித்துப்போகும்.
அடுப்புக்கல் தகரத்தின் கீழிருந்து
அறணை ஒன்று
என் கால் நக்கிச் செல்ல
நேரம் பார்த்திருக்கும்.
கரிக்குருவிகள் இரண்டு
எந்நேரமும் திட்டிக் கொட்டினாற்போல்
யன்னல் ஓரத்தில் வந்தமரும்

என் தலையணையின் அருகில்
படிப்பதற்காய் விரித்து வைத்த புத்தகங்கள்
காற்றில் படபடக்கின்றன
நித்திரையில்;
எலியும் அறணையும் கரிக்குருவியும் மாத்திரம்
வந்து போயிருக்க வேண்டும்.
09032007
--------------

குருட்டு வெளிச்சமும் ஊமை நாடகமும்

குருட்டு வெளிச்சமும்
ஊமை நாடகமும்
இந்த ஊர்கள் எங்குமே ஏற்றவைதான்
மெளனமாகும் இரவுகளில்
மனங்களும் முக்காடு போட்டபடி…
புரியாத பீதிகள் பித்துக்களாக்கும்
கதவுகள் இடைவெளியின்றி இறுகிக் கொள்ளும்
யன்னல்களும் காற்றுக்குத் தடைவிதிக்கும்
செல்லத்துரையர் வீட்டுச் சிறுநாய் குரைத்தாலும்
சிற்றெறும்பு கலைந்தாற்போல்
சிந்தனைகள் சிதறும்
விடியும் பொழுதின் நினைவுடன்
பாதி விழிகளின் துயிலில்
ஓரிரு சடசடப்பு…
மீண்டும் கணப்பை மூட்டும்
நாடி நரம்புகள்
நத்தின் ஓலத்தில் நலிந்து கொள்ள
மீதமிருக்கும் அந்நியகால இருளில்
மருண்ட வாழ்வு
மீண்டும் விழித்துக் கொள்ளும்

இந்த ஊரும் ஒழுங்கையும்
என்றுமே இப்படித்தான்!
குருட்டு வெளிச்சமும்… ஊமை நாடகமும்…
26.11.1997
---------------

தீர்ப்பு

இது நிச்சயிக்கப்பட்ட தீர்ப்பு
நீ ஏற்றுக் கொண்டாலும்
அல்லாவிட்டாலும்
அவ்வாறே.
சகதியில் புதைந்த
கால்களில் நெடில் போலவே.
எனது நானால் கூட
நிச்சயிக்க முடியாத நிலையில்
அடையாளம் இடவும்
‘ஆ’ வெனவும் ‘ஓ’ வெனவும்
சூத்திரக் கிணற்று மாடுகள் போல்
மீண்டும் மீண்டும் சுற்றிவரவும்
ஏற்றவைதான்.
சந்தர்ப்பத்திற்கு ஏற்ப
பல்லிளித்துத் தப்பிவிடும்
குட்டிநாய்கள் போலவும்
வாழ்வியல் அநுபவங்கள்.

இன்னமும்
நீ ஏற்றுக் கொண்டாலும்
அல்லாவிட்டாலும்
இது
நிச்சயிக்கப்பட்ட தீர்ப்புத்தான்!
1998
-------

மீளவும் மரங்களில் தொங்கி விளையாடலாம்

எப்போதோ முடிந்திருக்க வேண்டியது
இன்னமும் தொடர்கிறது

ஓடிய சைக்கிளில் இருந்து
இறங்கி நடந்து
ஓடவேண்டியிருக்கிறது
போட்ட தொப்பி
கழற்றிப் போடவேண்டியிருக்கிறது
எல்லாம் சரிபார்த்து மூடப்பட்ட
கைப்பை
மீளவும் திறந்து திறந்து
மூடவேண்டியிருக்கிறது
என் அடையாளங்கள் அனைத்தும்
சரியாகவே உள்ளன
என்றாலும்
எடுக்கவும் பார்க்கவும் வைக்கவும் வேண்டியிருக்கிறது
என்ன இது?
மீளவும் மீளவும்
ஆரியமாலா ஆரியமாலா பாட்டுப்போல்
கீறிக்கொண்டேயிருக்கிறது.

குரங்கு மனிதனாகி
மனிதன் குரங்குகளாகும் காலங்கள் எங்களதோ?
இப்படியே போனால்
மரங்களில் தொங்கி விளையாடவேண்டியதுதான்
மீளவும் மீளவும் குரங்குகள்போல்!
171020070715
--------------------

வெள்ளெலிகளுடன் வாழ்தல்

நாயுருவியும் ஆமணக்கும்
சடைத்து நின்ற
பற்றை மண்மேட்டில் வாழும்
வெள்ளெலியை ஒருமுறை சந்தித்தேன்

எனக்குப் பிடித்த
இரத்தநிற நாகதாளிப்பழத்தை
முள்நீக்கி
நட்சத்திரக்கொட்டை நீக்கி
சாப்பிட்டநேரம்
அந்த வெள்ளெலி
என்னை தன் வளைக்கு அழைத்துச் சென்றது
நானும் ஓர் எலியாகிச் சென்றேன்

அழகான வளைகள்
சேமித்த தானியங்கள்
புசிப்பதற்கு கொட்டைகள் கிழங்குகள்
கூடிக்குலாவ பெட்டை எலிகள்
ஒரு சோலியுமில்லை

எனக்கும்கூட…
புல்லாந்திப்பழம் கோரைக்கிழங்கு
கொவ்வைப்பழம் நன்னாரிவேர்
எல்லாமே பிடிக்கும்.
‘வசதியென்றால்
பக்கத்துத் தோட்டங்களில்
மரவள்ளிக்கிழங்குகள்
தோண்டியும் தின்னலாம் வா’ என்றது.
மனிதர்களும் பாம்புகளும் வந்தால்…
ஒளிந்திருக்க
வேறு வளைகளும் உண்டென்று கூறியது.

நான் இனி
வெளியில் வாழ்வதைவிட
வெள்ளெலிகளுடன் வாழப் போகிறேன்

பழங்கள்
கொட்டைகள்
கிழங்குகள்
வளைகள்
வெள்ளெலிகள்
எல்லாமே எனக்குப்
பிடித்துப் போயிற்று.
2006
-------

நாய் குரைப்பு

இந்த நாய்கள்
எப்போதும் குரைத்துக் கொண்டேயிருக்கின்றன
இரவு பகல் நடுச்சாமம்
எந்நேரமும் நாய் குரைப்பு

எக்கணத்திலோ
எப்பொழுதிலோ
வரப்போகின்ற சாவுக்கே
கலங்காத நாங்கள்
இந்த நாய் குரைப்புக்களுக்கு மட்டும்
கலங்க வேண்டியிருக்கிறது
மார்கழி மாதத்துக் கூதற் குளிர்கால நடுக்கம்போல்
ஒரு முதியவரின் தளர்வைப்போல்
எல்லாமே இந்த நாய்குரைப்புக் காலங்களில்
முளைத்து விடுகின்றன
அந்தக் காலங்களில்…
இந்த நாய்கள்
சுடலையிலிருந்து
புளியமரங்களிலிருந்து
நடந்து சென்ற பேய்களைப் பார்த்தும்
வானத்தைப் பார்த்தும்
கூரையைப் பார்த்தும்
குரைத்த காலங்கள் போய்விட்டதாக
என் அம்மாச்சி சொன்னது ஞாபகம்.
இப்போ
எங்கள் காலங்களுடன்
குரைத்துக் கொண்டிருக்கின்றன

மழைபெய்து ஓய்ந்த
மந்தார வேளைகளில்தான்
தடிகளுடனும் வேட்டைநாய்களுடனும்
எங்களுர் மனிதர்கள்
முயல் வேட்டைக்குப் புறப்படுவார்கள்
அந்தக் காலங்கள் கறங்குபோல் சுழன்று
இப்போதும் திரும்பிவிட்டனபோலும்

இறந்த காலங்களும்
நிகழ்காலங்களும்
எதுவெனப் புரியாமல்
விறுவிறுவென வலிக்கும் தேள்கடிபோல்
என் மூளைக்குள் எல்லாமே குழம்பிப்போயுள்ளது

இப்போ
இந்த நாய்கள்
குரைக்காது கடித்து விட்டாற்கூடப்
போதுமாயிருக்கிறது
அப்போதாவது
தொப்புளைச் சுற்றி
ஊசியைப் போட்டாவது தப்பிக்கொள்ளலாம்.
271020070815
--------------------

என்னை விரட்டிக் கொண்டிருக்கும் தலைகள்

இந்தத் தலைகள்
எப்போதும்
என்னை விரட்டிக் கொண்டிருக்கின்றன

தனியே வெட்டி எடுக்கப்பட்ட தலைகளுக்கு
சீப்புக் கொண்டு
எந்த ஸ்ரைலிலும்
என் கனவுகளில்
நன்றாக வாரிவிட முடிகிறது

தளர்ந்து… இறுகி…
தனியே வந்து விழும்
உறுப்புக்கள் ஒவ்வொன்றும்
என் கைப்பைக்குள்
பத்திரமாக இருக்கின்றன
தனியே வெட்டி எடுக்கப்பட்ட
ஒரு ஆட்டின் தலைபோலவே

துணிக்கடைகளின் முன்னால்
மொடல் உருவங்கள்
எடுப்பான தோற்றம்தான்
என்றாலும்;
அந்தத் தலைகள் மட்டும்
தனியே தொங்கிக் கொண்டிருத்தல்
இறைச்சிக் கடையில்
இரத்தம் சொட்டச் சொட்ட
கொழுவி விட்ட இறைச்சித் துண்டங்களாக
எனக்குள் உருக்கொள்கின்றன

மேக்கப்காரன் கூட…
மேசையில் வைத்த
பிளாஸ்ரிக் மொட்டைத் தலைகளுக்கு
விதம்விதமாக முடி வைத்து
மாற்றி மாற்றிப் போட்டு அழகு பார்க்கிறான்

தலைக்கு மட்டும் சம்பூ வைத்து
குனிந்து நின்று
தலை கழுவுதல் தாpத்திரமென்று
யாரோ சொன்னது ஞாபகம் வர
வீதிகளும் கடைகளும் மேக்கப்காரர்களும்
என்னை விரட்டுவதாக உணர்கிறேன்.
2006
------

தவம்

வெண்ணிலா துயிலெழுப்பும்
மெல்லெனவே தென்றல் கூடும்
புட்குலங்கள் அமைதியாகும்
ஆற்றோடை மெளனமாகும்
நீலவான வெண்பஞ்சும்
மெதுவாக சென்றொதுங்கும்.
ஓங்கார ஓசைகூட
ஓடி ஒதுங்கையிலே
மெளனத் தவமியற்றும்
உள்ளம்தான் எத்தனை?
தனிமையில் தனித்திருந்து
தரணியாளும் பதியவனை
மனித மனங்கள்
உச்சாடனம் செய்யும்
புரியாத இரவுகளில்…
வாழ்வினை அசைபோடும்
பிரிந்தவர் தொலைந்தவர்
இழந்தவை இருப்பவை
இன்னும்…
இவர்கள் மெளனத் தவமியற்றும்
முனிவர்கள்.
03.12.1996
--------------

மனிதர்கள் போலவே

சிலர் சிரிக்கிறார்கள்
இன்னலையே விழுங்கி
ஏப்பம் விட்ட வாயால்
மனிதர்கள் போலவே

சில நேரங்களில்
கடதாசிப் பூக்கள் போல்
பொம்மை முகம் பூட்டி
பொய்ம்மை முகம் காட்டி
ஈரமற்ற நெஞ்சுடன்

சுவரில் வரைந்த ஓவியமாக
வெறும் பற்களைக் காட்டி
இன்னமும் சிரித்தபடியே!
மணமற்ற பூவாக…
நீரற்ற பயிராக…

இவர்கள்
மனிதத்தை இழந்த
மனிதர்கள் போலவே.
16.04.1998
---------------

எச்சம்

சன்னம் பட்ட சுவர்
சிதைந்த யன்னல்
பாதிக்கதவு
முறிந்து விழக் காத்திருக்கும்
சலாகை மரங்கள்
தன் இஷ்டம்போல் உடைந்து சிதறிய
ஓட்டுத் துண்டுகள்
வெட்டியெறிந்த துணிகளாக
கண்ணாடித் துண்டுகள்

கால் படாத நிலத்தில்
பரவிப் படரும் நெருஞ்சி முட்கள்
குறோட்டன் சாடி உடைவினூடாக
எட்டிப் பார்க்கும் எருக்கலஞ் செடிகள்
இன்ரநெற் வலைப்பின்னல் போல
சிலந்தி வலைகள்
எல்லாம்,
எங்கள் பரிணாம வாழ்வின்
எச்சங்கள்தான்!

என்றாலும்
உடைந்த வீடுகளில்
உயிர்கள் இல்லையென்று
யார் சொன்னது?
அந்தச் சுவர்களில் ஒட்டிக் கொண்ட
பல்லிகளைப் பாருங்கள்
அவை இன்னமும் உயிர்வாழ்கின்றன
மிகுந்த நம்பிக்கையுடனே!
1998
-------

பாதிச்சுவர்

அந்தப் பாதிச் சுவரைக் காணும்போதெல்லாம்
என் பாதம் பதிந்த சுவடுகளே
இன்னும் நினைவுகளாகும்
முட்கம்பியும் மண்மூடையும்
முன்னால் முட்டுக் கொடுத்தபடி
காத்திருக்கும்
நட்டு வைத்த கட்டைகளாக
நாலு பனங்குற்றி நல்வரவு கூறிநிற்கும்

விடிகாலை வேளையிலே
பூவெடுக்கும் பையன்
கொக்கித் தடியோடு
தேமா மரத்தின்
தூரத்துக் கொப்பு வளைத்து
கூடை நிரப்பி
கோயிற் கதைகூறிச் செல்வான்

தாத்தா பொழுது போகவென
முற்றத்துப் புல் பூண்டுகளை
தலை காட்ட விட்டிடாமல்
பழங்கதை கூறியபடியிருக்க...
வேப்பம் பூவுதிர
அணிற்பிள்ளைகள் சவாரி விடும்.
‘கோடையில் நானழகு’
முள்முருக்கமரம் செந்நிறப் பூக்களுடன்
‘நல்லூர்த் திருவிழாவில் இளசுகள்’ போல்
சிரிக்கும் ஒலி கேட்டு
புலுணிகள் வந்து
புதுவேதம் பாடும்.
தலைவாசற் கதிரையில் குந்தியிருந்து
றோட்டுப் புதினம் பார்த்த நினைவுகள்
இப்போ. வீட்டு முற்றம் சுற்றிப்
புல்மண்டிப் பாழடைந்த கிணறுபோல்!
குட்டிச் சுவர்கள் மட்டும்
எச்சங்களாகி எட்டிப் பார்த்தபடி…
இன்னமும்;
அந்தப் பாதிச்சுவரைக் காணும்போதெல்லாம்
எருக்கலையும் நாயுருவியும்
என்னைப் பார்த்துப் பல்லிளித்தபடியே!
1998
-------

கைவீசி நடந்து

என் கைகள் இரண்டும்
வீசி நடந்து தொலைத்து விட்டேன்
இன்றுவரையும் தேடிக் கொண்டிருக்கிறேன்

பணம்... பொருள்
இதயம் கூடத் தொலைப்பதற்குரியதே.
என் மூச்சுக் காற்றின் முன்னால்
இவை சிறுதுளி
நான் தொலைத்து விட்டேன்
தேடிக் கொண்டிருக்கிறேன்
வெண்மணற் பரப்பில் வீழ்ந்து மறைந்து விட்ட
வெள்ளிக் காசுகள் போல்
என் கைகள் இரண்டும் வீசி நடந்து
தொலைத்து விட்டேன்

துலாக்கயிறு அறுந்து
ஆழ்கிணற்றில் அமிழ்ந்தாலும்
தூண்டியிட்டு எடுத்திடலாம்
ஆனால்
இது தூண்டியிட்ட வாழ்வு
முழுநிலவு வானில்
முகங் காட்டும் போதெல்லாம்
நிலவை ரசிப்பதற்கும்
நாதியற்றுப் போன வாழ்வு

நிலவை... உறவை... உலகை...
அறிந்தவனும் அறிஞனாகலாம் ஞானியாகலாம்
அறியாதிருப்பதும் முட்டாள்த்தனமல்ல
பிஞ்சுப் பருவம் கூட…
அறியாப் பருவம்தான்

ஆம், நான் தேடிக் கொண்டிருக்கிறேன்
எப்போதோ தொலைத்துவிட்ட
என் பிஞ்சுப் பருவத்தின்
நினைவறியா நாட்களை!
16.08.2000
---------------

அலைவும் தொலைவும்

நாங்கள் நடக்கிறோம்
கண்ணுக்குத் தெரியும் திசை நோக்கி
கால்களும் கைகளும் சோர
சுமக்க முடியாத பாரங்களைச்
சுமந்தபடியே நடக்கிறோம்

முட்புதர்களையும்
முகத்தில் முட்டிக் கொள்ளும்
சிலந்தி வலைகளையும்
விலக்கியபடியே நடக்கிறோம்

இடையிடையே
உப்பு வெளிக் காற்றும்
கந்தக நெடி பரவும் மனத்தினையும்
எதிர் கொண்டபடியே

எங்கள் பயணமெங்கும்
கசாப்புக் கடைக்காரன் வீசியெறிந்த
எலும்புத் துண்டங்களாக
எச்சங்கள் தென்பட்டன

ஆனாலும் நாங்கள் நடக்கிறோம்
நிரந்தரத் தரிப்பிடத்தைத் தேடி
மிகுந்த நம்பிக்கையுடனே!
20.05.2002
---------------

ஒரு பெருந்துயரின் பாடல்

அலைகீறிய உன் மடியில்
துள்ளிவரும் வெண்நுரையில்
நெஞ்சம் மகிழ்ந்திருந்தோம்
அன்று மட்டும் நீ
பெரும்பாவம் செய்துவிட்டாய்

பால்குடிக்கும் பாலகரை
உன் நீர்குடித்து
மடிய வைத்தாய்
என் உறவு என்று
இறுகப் பற்றிய கரங்களைப்
பறித்துச் சென்றாய்
சோதரரை அடித்துச் சென்று
சுவரிலே மோதிக் கொன்றாய்
தள்ளாடும் வேளையிலே
தரையிலே உருட்டிச் சாய்த்தாய்
உன்னை
எப்படி மன்னித்தல் கூடும்?

நிரையாய்... குவியலாய்…
உருவழிந்த உடல்களுடன்
ஓலமிட்டு அழுகின்றோம்
டிரக்டரில் ஏற்றியே
கல் மண் கொட்டினாற்போல்
குழிகளில் கொட்ட வைத்த
பெருந்துயர்தான் என்ன?

போரையே தோற்கடித்து
உயிர்குடித்த மயக்கத்தில்
கிறங்கிப் போயுள்ளாய்
உன்னை என் வாயால்
வாழ்த்தவா போகிறேன்?
உன் முகத்தில் உமிழ்ந்து
சபித்துக் கொட்டுகிறேன்
ஏ...கடல் அரக்கியே
சபித்துக் கொட்டுகிறேன்.
30.12.2004
---------------

ஒரு மரணம் சகுனம் பார்க்கிறது

நடந்து செல்லும் வயல் வரம்புகளில்
படுத்திருக்கும் பாம்புகள்போல்
வீதிகளின் வெளியெங்கும்
பதுங்கியிருக்கிறது மரணம்

கலகலப்பான மழலைக் குரல்களையும்
தம் நீண்ட பிரிவின் பின்னான
உறவுகளையும்
தம் கடமை முடிக்க விரையும்
எல்லோரையும் தோற்கடித்து
வெடித்துச் சிதறடிக்கும்
ஒரு வெடிகுண்டைப்போல்
காத்திருக்கிறது மரணம்

பெரு வீதிகளிலும்
சந்திகளிலும்
ஒழுங்கைகளிலும்
பாலங்களுக்கு அடியிலும்
பதுங்கியிருந்து...
தன் இரத்தம் குடிக்கும் கோரப்பற்களுடன்
பிணம் தின்னும் கழுகுபோல்
எங்கும் காத்திருக்கிறது.

மனிதனைக் கொல்ல
சகுனம் பார்த்துக் கொண்டிருக்கும் மரணத்துடன்
கண்களும் காதுகளும் இருந்தும்கூட
பலர்
வீதிகளில் கைகுலுக்கிக் கொள்கிறார்கள்.
2004
------

மழை ஓவியம்

என் கால்களைச் சுற்றி
வட்டமிட்டு ஓடுகிறது
மழை விட்டுச் சென்ற ஓவியம்

கால்களில் குழைந்து
மர இடுக்குகளில் சிலிர்த்து
இலைகளில் பளிச்சிட்டு
மண்ணில் உள்ளொடுங்கி
ஓடுகிறது
மழை விட்டுச் சென்ற ஓவியம்

எந்தனூர்க் குளம் நிரப்பி
ஊருக்கு அழகு செய்த
மழை இதுதான்
பின்னர் வாழைத்தோட்டத்துள் புகுந்து
வேரை ஈரமாக்கியதும் இந்த மழைதான்
ஆனாலும்,
ஒருபொழுது வானத்தில் பறந்து வந்த
தூதனின் பார்வையால்
மேகம் பார்க்கத் தொடங்கிய வீட்டில்
இந்த மழை கொட்டும் போதெல்லாம்
வீட்டுக்குள்ளே வரையப்படுகின்றன
மழை தூவிய ஓவியங்கள்

தூதனின் காருண்யம் தான்
என்னவென்பது?
இன்னமும்… எல்லாமுமாக…
2005
------

கடற்கரை மட்டும்

எனக்கு இன்னமும் ஞாபகம் இருக்கிறது
ஒவ்வொரு ஞாயிறு மாலையும்
மாதா கோயில் கடற்கரை மணலில்
நடந்து திரிந்து
சிப்பிகள் பொறுக்கியது

அந்த ஒற்றைக் கட்டுமரமும்
குவியல் வலைகளுடன் குடிசையும் கூட
எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது

மணலில் கால்கள் புதைய
சிப்பிகள் கிண்டியெடுத்து
என் உள்ளங்கை இரண்டும்
சோ;த்துக் குலுக்கும்போது
தயங்கித் தயங்கி வந்தாள்
அந்தச் சிறுமி
சிநேக சிரிப்புடன்
தன் சட்டைப் பையில் இருந்து
இன்னமும் எனக்குச் சிப்பிகள் தந்தாள்

ஒரு பொழுது
கடலைவிட்டு வீதிக்கு வர
ஆசைப்பட்ட அலைகள்
ஒரு கடற்கொள்ளையன்போல்
ஊரையே கொள்ளையடித்துத் திரும்பின

அந்த ஒற்றைக் கட்டுமரமும்
குவியல் வலைகளுடன் குடிசையும்
எனக்குச் சிப்பிகள் தந்த
சிநேகிதியும் இல்லை.
கடற்கரை மட்டும் அப்படியே!
01.04.2005
---------------
குப்பை மேட்டிலிருந்து இலையான் விரட்டும் சொறிநாய் பற்றிய சித்திரம்...

கழிவுகள் கொட்டும் குப்பை மேட்டில்
குடியிருக்கிறது சொறிநாய் ஒன்று

அழுகிய… அருவருப்பான…
சக்குமணம் விரட்டும்
குப்பை மேட்டில்
கண்களில் பீளை வழிய
பிய்ந்து தொங்கும் புண்களில்
இலையான்கள் மொய்க்க
குடியிருக்கிறது சொறிநாய் ஒன்று

பச்சைப்புல் படர்ந்த
மழை நீரோடி அழகாக்கிய மண்ணில்
அழகான சடைத்த குட்டியாய்
வாலாட்டி
வளைந்து நெளிந்து
வருபவர் முகம் பார்த்து
பல கதைகள் கூறிய
அழகான நாட்கள்
அதன் இறந்த காலமானது

காலம் விரட்ட
கதிகலங்கி ஓடியோடி
வாழ்வின் எல்லையாகிப்போன
விரட்டலின் ஓரமாகிப்போன
இந்தக் குப்பை மேட்டில்
தவமிருக்கிறது

என்றாவது ஒருநாள்
இந்தக் குப்பை கொட்டல்
இல்லாதுபோனால்
அதற்கு இளமுயிர்ப்புப் பெறும்
நம்பிக்கை தானும் உள்ளதோ?
யாருக்குத் தெரியும்?

எலும்புகள் வெளித்தெரிய
நடக்க முடியாத பலவீனத்தோடு
விரட்டலின் ஓரத்தில்
இன்னமும் தவமிருக்கிறது சொறிநாய்.

இலையான் விரட்டும் ஒரு செயல் தவிர
அதனால் வேறு எதுதான் இயலுமோ?
050320071055
--------------------

தூசிபடிந்த சாய்மனைக் கதிரை நாட்கள்

தூசிபடிந்த சாய்மனைக் கதிரை நாட்களாக
நகர்ந்து கொண்டிருக்கிறது வாழ்வு

கொளுத்தும் வெய்யிலில்
கொட்டித் தள்ளும் இலைகளின் உதிர்ப்பில்
பேய்க் காற்றுத் தாண்டவத்தில்
எல்லாமே அள்ளுண்டபடி

சிவப்பு கறுப்பு பொட்டிட்ட
ஒரு தனியன் வண்ணத்துப்பூச்சி
செழிப்பிழந்து போன
நித்திய கல்யாணிப் பூக்களில்
நம்பிக்கையுடன்
தேடித் தேடித் தேனெடுக்கும் நாதிகூட…
நம் வாழ்க்கையிலிருந்து
மெல்ல மெல்லக் கைநழுவிப் போகிறது.

அதற்கிருக்கும் திராணிகூட
இல்லாமற் போய்விடுமா?

வீதிகளும் வெளிகளும்
வெறுமையாகிப் போன
நம் கதைகளையே
மீண்டும் மீண்டும் சுமக்கின்றன
வரிசை கட்டிக் கொள்வதும்
நேரம் கடத்தும் காத்திருப்பும்
நரம்புகளும் எலும்புகளும் வெளித்தொpயும்
காற்றுப் பைகளாக்குகின்றன.
சொரசொரத்துப் போன கடதாசிப் பூக்களில்
இருக்கும் ஈர்ப்புக் கூட
இந்த நடைப்பிணங்களில் இல்லை

பழுப்பேறிப்போன சோம்பேறி இருட்டில்
மூன்று நாளாக உதறிப் போடாத
அழுக்குப் படிந்த போர்வையுடன்
நேரத்திற்கு நேரம் கம்மிக் கொண்டு
மண் நிரப்பிய சிரட்டையில்
எச்சில் துப்பிக் கொண்டிருக்கும்
இந்தத் தரித்திரத்தை
யாரிடம்தான் கேட்டுப் பெற்றுக் கொண்டோம்?

அழுக்கு மூட்டையாய்
அம்மிக் கொண்டு நீண்டு கிடக்கும்
தூசி படிந்துபோன சாய்மனைக் கதிரையாக
நகர்ந்து கொண்டிருக்கின்றன நாட்கள்

காத்திருப்புக்களின் நடுவே...
பழுத்துப்போன இலைகளாக
உதிர்ந்து கொண்டிருக்கிறது வாழ்வு.
20052007
-------------

யாரோ எங்களைக் களவாடிச் செல்கிறார்கள்

திருடர்கள் களவெடுக்கிறார்கள்
தாம் வைத்த இடத்தில்
தம் பொருட்களை எடுத்துச் செல்வதுபோல்

என் உணர்வு
என் இருப்பு
எல்லாம்
யார் யாரோ களவாடிச் சென்றபின்
யாருமறியா இருளில்
திருடர்கள்
என் பொருட்களையும் களவாடிச் செல்கிறார்கள்
என் இனத்தவர்கள்
என் உறவினர்கள்
அவர்களின் சாவிற்கூட
நானும் பங்குகொள்ள வேண்டியவன்.
நான் பார்த்துக்கொண்டிருக்கும்போதும்
பார்க்காதபோதும்
என்னை வருத்தி நான் சேகரித்த
என் பொருட்களையும்
களவாடிச் செல்கிறார்கள்

பட்டுப்போன ஒரு பனைமரக் கொட்டுப்போல்
நாங்கள் எல்லோரும்
பார்த்துக் கொண்டிருக்கிறோம்

களவு பற்றிக் கதைப்பதிலும்
கணக்குப் பார்ப்பதிலும்
எங்கள் காலங்கள்
வெகு இலகுவாகக் கழிந்து கொண்டிருக்கின்றன
மிகச் சாதாரணமாய்
ஒரு மனிதனின் சாவு போலவே.
270320082211
--------------------

நானும் நானும்

அந்திப் பொழுதின்
முகில் மறைக்கும் சூரியன்போல்
என் தனிமை
காலை என் கதவைத் திறந்தவுடன்
கண்ணண்ணா வீட்டுக் கறுப்பன்
தன் உடல் குறுக்கி வாலாட்டும்
நேற்றைய மிச்சச் சோறும்
புளித்துப் போன கறியும் ஞாபகம் வரும்
மதியம்
பள்ளிப் பிள்ளைகள் ஆரவாரம் அடங்க
ஒரு குட்டித்தூக்கம்
நித்திரை குழம்ப
வீட்டுக் கூரையில் தாவி ஓடும்
தனியன் குரங்கொன்றின் அசைவு தெரியும்
தேக்கங்காய்க்கும் நெல்லிக்காய்க்கும்
சிறிசுகள் எறிந்த
தடிகளும் கற்களும் உருண்டு விழும்
மேசையில் குவிந்திருக்கும்
வேலைகளில் கண்கள் மேய
ஆக்காண்டிக் குருவியொன்று
ஆழக்குரலெடுத்து அமைதியைக் குழப்பும்.
குளத்தின் அருகே செழித்த
மருத மரங்களில் வாசஞ்செய்யும்
வெளவால்களின் தேடல்…
அந்திப் பொழுதை ஞாபகப்படுத்தும்.
முகங்கழுவி ஒரு பிளேன்ரீ போட்டு
நீளவாங்கில் சப்பாணிகட்டி
உறிஞ்சிக் குடிக்க மனது ஆதங்கப்படும்.
பள்ளிக்கூட சாப்பாடு செய்யும்
செல்லப்பாவின் கடகட சைக்கிள்
‘என்ன மாஸ்ரர் தனிய?’
தூரத்தே யாரோ
கிணற்றில் தண்ணீர் அள்ளும் சத்தம்
கதவைச் சாத்துகிறேன்
இனி நானும் எனது தனித்த அறையும்
வெள்ளைச் சுவர்களில் கறுப்புப் படரும்
என்னுள்ளும் ஏதோ படர்வதுபோல்.
26.07.2004
---------------

மனிதர்கள் இல்லாத பொழுதுகள்

துயர் கவிந்த பொழுதுகளோடு
அலைகிறேன்
கூட்டத்திலிருந்து தவறிய
தனியன் ஆடுபோல்

இருப்பது புசிப்பது படிப்பது
எப்படி முடியும்?
மனிதர்கள் தவிர்ந்த
நீண்ட பொழுதுகளில்
நாய்களும் எலிகளும் குரங்குகளுமே
அதிகமும் சந்திக்கின்றன

கூட இருந்த நண்பனும்
மாற்றலாகிச் சென்றுவிட
மழைக்குச் செழித்த பற்றைகளைப்
பார்த்துக் கொண்டிருக்கிறேன்
இப்போது
கூடவே என்னுடன் இருப்பதற்கு
ஒரு மோட்டார் சைக்கிள்
ஒரு கைப்பை
சில புத்தகங்கள் மட்டுமே
இப்போ இவை என் நண்பர்கள் போலும்!
11.12. 2007
----------------

புணர்ச்சி

முற்றுப்பெறாத கதை
இன்னமும் தொடர்கிறது
மிக அவசர அவசரமாக
ஒவ்வொருவராக
புணர்ந்து கொள்கிறார்கள்
புனிதம்... அந்தரங்கம் எல்லாம்
அவசர அவசரமாக
தன்னிலை இழக்கிறது

வீரியம் குறைந்து விடும் என்பதற்காகவோ
முதுமை வந்துவிடும் என்பதற்காகவோ
அழகு குலைந்து விடும் என்பதற்காகவோ
முழுதாக அவிழ்க்காத ஆடைகளோடு
புணர்ந்து கொள்கிறார்கள்
மூத்திரம் கழிக்கும் சந்துகளில்
வெற்றிலைத் துப்பல் நிரம்பிய சுவர்களுக்கிடையில்
மலக்குழிகளின் வாயில்களுக்கிடையில்

வாத்ஸாயனரின் சூத்திரம் எல்லாம் பறந்து போக
எல்லோரா ஓவியங்களின் காட்சிகள் எல்லாம் கழிந்து போக
சொறிநாய்களும்
விரல்கள் இழந்த குஷ்டரோகக்காரனும்
வாயில் வீணீர் வடித்தபடி பார்த்துக் கொண்டிருக்க
எங்கும் புணர்ச்சி

மூத்திரம் கழிக்கும் சந்துகளில்
வெற்றிலைத் துப்பல் நிரம்பிய சுவர்களுக்கிடையில்
மலக்குழிகளின் வாயில்களுக்கிடையில்!

இரவு அவசர அவசரமாக
இருளை விழுங்கிக் கொள்கிறது.
140920060025
--------------------

பல் நா சுவையறியாது

தின்
கடித்துத்; தின்
பற்களுடன் நாவும் சுவையறியாது
மரக்கறியோ மாமிசமோ இல்லாவிட்டாலும்
பரவாயில்லை
கோழி ஆடு மாடு
எல்லா இறைச்சியும் திண்டாயிற்று
அதைவிட,
சுவையறியாப் பல்லுக்கு
மனித இறைச்சி
மிக நல்லது.

நாய் இறைச்சி
பூனை இறைச்சி
இவை பழக்கமில்லையாயினும்;
மனித இறைச்சி
மிக நல்லது.
நிணமும் குருதியும் குடிக்கும்
பேய்கள்
நர மாமிசம் தின்னும் அரக்கர்
எல்லாம் அறிந்தோம் எம் படிப்பில்
என்றாலும்
மனித இறைச்சி இப்போ மிக நல்லது.
தின்
கடித்துத் தின்
பற்களுடன் நாவும் சுவையறியாது

கண்களை முட்டைபோல் அவித்துச் சாப்பிடு
எலும்புகளை சூப்பு வைத்துக் கொள்
தசைகளைத் துண்டு துண்டாக்கி குழம்பு வைத்துக்கொள்
மிக மலிவு
மரக்கறியோ மாமிசமோ தேவையில்லை
மிக மலிவானது
மனித இறைச்சி ஒன்றுதான்.

பற்களுடன் நாவும் சுவையறியாது
தின்
நன்றாகக் கடித்துத் தின்!
14032007
-------------

கோழி இறகும் காகங்களும்

ஒரு நாள் மதியம்
எல்லாக் காகங்களும் கூடிக் கரைந்தன

வீட்டின் முன்புற மாமரத்திலும்
பின் வளவு முருங்கையிலும்
வேலியோரக் கதியால்களிலும்
கூடியிருந்த காகங்கள்
பலமாகக் கரைந்தன

தேடலில் இறங்கினேன்
வீட்டிலேதும் மீன் வெட்டவுமில்லை
அதன் உறவுக் காகம் இறந்த
அடையாளமும் இல்லை
வீட்டாரைக் கேட்டேன்
யார்க்கும் ஏதென்று தொpயாதாம்

அப்போதுதான்
என் வீட்டு மஞ்சள் பூப்பந்தற் காலருகே
பிடுங்கி எறியப்பட்ட
நான்கைந்து
வெள்ளை சாம்பல் கலந்த
கோழி இறகுகள்.
கோழி தானாக இறகு உதிர்க்குமா?

காகங்கள் இன்னமும் கரைந்தபடி
இறகுகள் மட்டும் அடையாளமாக.
171120052308
--------------------

கண்களைப் பற்றி எழுதுதல்

இந்தக் கண்களுக்கு
எப்போதும் கனவுகள் பலவுண்டு
சிலை செதுக்கும் சிற்பியும்
இறுதியில் திறப்பதும் கண்களைத்தான்
கடவுளும் கண்களைத் திறந்தால்
கருணை பொழிவார் என்கிறார்கள்
நாங்கள் எப்போதும் ஒருவர் கண்களை
மற்றவர் பார்த்துக் கொண்டிருக்கிறோம்
சிரிக்கும் கண்கள்
எரிக்கும் கண்கள்
கருணைக் கண்கள்
கயமைக் கண்கள்
கண்காணிக்கும் கண்கள்
கண்டுகொள்ளும் கண்கள்
எல்லாம் கண்கள்தான்
பார்வையில்தான் அப்படி என்ன வித்தியாசம்?
வானில் மிதக்கும் வெண்ணிலாபோல்
இந்த உலகெங்கும் மிதந்து கொண்டிருக்கின்றன
எல்லாக்கண்களும்… எல்லார்மேலும்!
கண்கள் இல்லாது போனால்?
தடவித் தடவி தடுக்கி விழவேண்டியதுதான்.

போகும் இடங்களில் மிகக் கவனமாக
மற்றவர் கண்களைப் பார்த்துக் கொள்ளவேண்டும்
சந்திகளில் வீதிகளிலும்கூட…
கண்களில் அக்கறை கொள்ளவேண்டும்.
கண்களை மட்டுமா?
கைகளை… சைகைகளை...
சிந்தனையை வீட்டில் கழற்றி வைத்துவிடவேண்டும்

தந்திரமும் தப்புதலும் மிக முக்கியம்
இல்லாவிட்டால்
போகிற போக்கில் கண்களைப் பிடுங்கி விட்டு
வீதியில் விட்டு விடுவார்கள்
வெள்ளைப் பிரம்புகூடத் தரமாட்டார்கள்
யார் இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன?
இலாப நட்டத்தை யார் பார்க்கிறார்கள்
அவரவர்… அவரவர் பாடு

சும்மா போ
கண்களாவது பிரம்பாவது!
260820071033
--------------------

எல்லாமே இயல்பாயுள்ளன

எல்லாமே மிக இயல்பாய் உள்ளன
எதை வேண்டுமானாலும்
தெரிவு செய்யலாம்
தெரிவு மட்டும் எனதாய் உள்ளது
இன்று இருப்பதும்
நாளை இருப்பதைத் தீர்மானிப்பதும்
மிக எளிதாயிருக்கிறது

சாப்பிடுவது
நடந்து செல்வது
ஆட்களைப் பார்க்கும்போது
எந்தச் சலனமுமில்லாது
ஒரு விளையாட்டுப் பொம்மைபோல்
பார்த்துக் கொண்டேயிருப்பது
எல்லோரும் சிரித்து ஓய்ந்தபின்
ஒப்புக்காக
சிறு உதட்டுப் புன்னகையை
காட்டிவிட்டுப் போவது
எல்லாமே இயல்பாயுள்ளன

ஒரு கூரான கத்தியோ
ஒரு நீளக் கயிற்றுத் துண்டோ
ஒரு கிணறோ
எனது தெரிவுக்கு மிகப் பொருத்தமானது.
இறைச்சிக்காக கழுத்து இறுக்கப்பட்டு
கதியாலில் தொங்கவிடப்பட்ட
ஒரு கோழியின்
செட்டையடிப்பின் பின்னான அமைதியும்…
கூடவே கிடைத்துவிடும்

எல்லாமே மிக இயல்பாய் உள்ளன
நான் எதை வேண்டுமானாலும்
தெரிவுசெய்யலாம்
தெரிவு மட்டும் எனதாய் உள்ளது.
160120080637
--------------------

மூச்சுக்காற்றால் நிறையும் வெளிகள்

1
மூச்சுக்காற்றால் நிறைகின்றன
வெளிகள்
எல்லைகள் தாண்டிச் சென்று
இடைவெளிகளை நிரப்பிடாதபடி
கூட்டுக்குள்ளேயே
நிரம்பித் திமிறுகின்றன
கண்ணாடி மீன் தொட்டிகளில்
முட்டிமோதும்
மீன்குஞ்சுகளைப் போலவே!

புதிய மூச்சு
இளைய மூச்சு
முதிய மூச்சு
எல்லாம் நெருக்கியடித்தபடி
ஒன்றையொன்று முட்டிமோதியபடி
அலைகின்றன
சுவரில் மோதித் திரும்பும்
ஒரு பந்தைப்போலவே!

மூச்சுக்காற்றால்
மீண்டும் மீண்டும்
நிறைகின்றன வெளிகள்

இற்றுப்போன
ஓர் இலைச்சருகின் இடைவெளியை
நிரப்பிக் கொள்கிறது
செம்மண்

2
சுவாசத்தின் துவாரவெளிகள் அடைபட்டு
கண்களிலிருந்து வெளியேறுகின்றது மூச்சுக்காற்று

வாயும் காதும் பிருஷ்டமும் என
உடலத்தின் ஓட்டைகளை அடைத்துவிட்டு
இரண்டு கண்களையும் தள்ளிக்கொண்டு
கட்குழிகளிலிருந்து
குருதியுடன் வெளிக் கிளம்புகின்றது மூச்சுக்காற்று

கண்கள் மட்டும் இரு பெரும் முட்டைகள்போல்
நரம்புகளுடன்
முன்னால்
அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கின்றன

கட்குழிகளும் இமைகளும்
கண்களைத் தேடிக்கொண்டிருக்கின்றன

மூச்சுக் காற்று மட்டும்
தன் இஷ்டம்போல்
கண்களால் வெளியேறிக்கொண்டிருக்கிறது.
271220070654
---------------------